ஐபிஎல் போட்டிக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை அண்ணா சாலையில் பாரதிராஜா, சீமான் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

காவிரி மேலாண்மை வாரியத்துக்காக தமிழர்கள் ஒன்றிணைந்து போராட்டம் நடத்திவரும் நிலையில், ஐபிஎல் போட்டியை சென்னையில் நடத்தக்கூடாது என்ற குரல்கள் வலுத்தன. எதிர்ப்புகளையும் மீறி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் போட்டி நடத்தப்பட உள்ளது.

சேப்பாக்கம் மைதானத்திலும் மைதானத்திற்கு செல்லும் வழியிலும் சுமார் 4000க்கும் அதிகமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். எனினும் மைதானத்தை நோக்கி பேரணியாக சென்ற விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கைது செய்யப்பட்டனர். அண்ணா சாலையில் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழக வாழ்வுரிமை கட்சியினரும் கைது செய்யப்பட்டனர்.

தமிழர் கலை இலக்கிய பண்பாட்டு பேரவை சார்பில் இயக்குநர் பாரதிராஜா, வைரமுத்து, சீமான், வெற்றிமாறன், கௌதமன் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் அண்ணா சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆயிரக்கணக்கானோர் குவிந்ததால் அண்ணா சாலையே ஸ்தம்பித்தது. 

சேப்பாக்கம் மைதானத்திற்கு செல்லும் அனைத்து சாலைகளும் மூடப்பட்டுள்ளன. எனினும் ஆயிரக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். சேப்பாக்கம் மைதானத்தை நோக்கி பேரணியாக செல்ல முயன்றனர். போராட்டக்காரர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.