மேலும் 19 நாட்களுக்கு ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளார் பிரதமர் மோடி ,  நாட்டு மக்கள் பின்பற்றுவதற்காக 7 கடமைகளையும் அறிவித்துள்ளார் ,  ஆனால் மக்களைக் காப்பதற்கு அரசாங்கம் என்ன கடமைகளை ஆற்ற போகிறது என்பதை அவர் கூறவில்லை என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி மத்திய அரசை விமர்சித்துள்ளார் , இது குறித்து செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ள அவர்,  நாட்டில் கடந்த மூன்று வாரங்களாக  அமலில் இருந்து வந்த ஊரடங்கு 14ம் தேதியுடன் முடிவுக்கு  வந்த நிலையில் ஊரடங்கால் பாதிப்புக்குள்ளான  ஏழை எளிய விளிம்புநிலை மக்கள் மற்றும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்களுக்கு ஏற்பட்ட பிரச்சனைகளை  தீர்க்க அரசு நிவாரணம் வழங்கும் என ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்தனர் . ஆனால் பிரதமர் உரையில் அது தொடர்பான எந்த அறிவிப்பும் இல்லை என்பது மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறது.  ஊரடங்கு மூலம் கடந்த 3 வார காலமாக நாட்டு மக்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் பசி  பட்டினி பஞ்சம் பரவியிருக்கிறது ,

 

இந்நிலையில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு குடும்பத்துக்கு 7,000 ரூபாய் உடனடியாக அளிக்க வேண்டியது அரசின் கடமை,   பொது விநியோக திட்டத்தின் கீழ் அத்தியாவசியப் பொருட்கள் அனைத்தையும் உடனடியாக மக்களுக்கு  வழங்க வேண்டும்.  தற்போது மேலும் நீட்டக்கப்பட்டுள்ள ஊரடங்கால்  பட்டினிச்சாவுகள் ஏற்படுவதை தடுக்க அரசாங்கம் உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்றார் .  ஊரடங்கு காலத்தில் எந்த தொழிலாளரையும் நிறுவனங்கள் வேலை நீக்கம் செய்யக்கூடாது  என பிரதமர் வேண்டுகோள் விடுத்திருக்கிறார், ஆனால் வெறும் வேண்டுகோள் போதுமானது அல்ல,  நாடு முழுவதும் மிகப்பெரிய அளவில் வேலை இழப்புகள்  மற்றும் ஊதிய வெட்டு போன்றவை நடைபெற்று வருகிறது , உடனே இதில் அரசு தலையிட்டு இவற்றை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் .

 

மாநில அரசுகள் சுகாதார பணிகளை தாராளமாக மேற்கொள்ள உடனடியாக நிதி வழங்கி மத்திய அரசு உதவ வேண்டும் . இது அறுவடை காலம் என்பதால் விவசாயிகளுக்கு  அவர்கள் உற்பத்தி  செய்யும் பொருட்களுக்கு செலவீனங்களை ஈடுகட்டும் வகையில்  ஒன்றரை மடங்கு கூடுதல் விலை நிர்ணயித்து அவர்களிடமிருந்து விளைபொருட்களை கட்டாயமாக கொள்முதல் செய்வதை உத்தரவாதம் செய்திட வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.  தற்போது உள்ள ஊரடங்கை நன்கு பயன்படுத்திக் கொண்டு,  இந்த தொற்று நோய் எங்கெல்லாம் அதிகமாக இருக்கிறது என்பதை அடையாளம் கண்டு அந்தப் பகுதிகளை தனிமைப்படுத்த வேண்டும்.  கொரோனா பரிசோதனையில் உலகிலேயே நம் நாட்டில்தான்  மிகவும் குறைவான அளவில் பரிசோதனை செய்யப்படுவதாக பல நாடுகள் குறைகூறுகின்றன.  இதை கருத்தில் கொண்டு பரிசோதனைகளை அதிகபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.  

கொரோனா சிகிச்சையில் ஈடுபடும் மருத்துவர்களுக்கு  உரிய பாதுகாப்பு கவசங்கள்  அளிக்கப்படாததால் அவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற செய்தி ஆழ்ந்த கவலை அளிக்கிறது.  உடனே மருத்துவ ஊழியர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் அளிப்பதை போர்கால நடவடிக்கையாக அரசு எடுக்கவேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.  அரசாங்கம் ஏப்ரல் 20 அன்று நிலைமையை மறு ஆய்வு செய்து,  ஊரடங்கு தளர்த்துவது சம்மந்தமாக நடவடிக்கைகள் எடுக்கும் என பிரதமர் கூறியுள்ளார்,  அப்போது புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மீளவும் அவர்கள் வீடுகளுக்கு செல்வதற்கும்  போக்குவரத்து வசதிகளை செய்து தரவேண்டும் ,  இப்பிரச்சனைகள் அனைத்தும் உடனடியாக பரிசீலித்து தேவையான வழிகாட்டுதல்களை பிரதமர் வழங்க வேண்டும் என சீதாராம் யெச்சூரி கேட்டுக்கொண்டுள்ளார்.