தமிழகத்தில் தாமரையை மலர வைக்க பல திட்டங்களை கையில் வைத்து கொண்டு செயல்படுத்தி வருகிறது பாஜக. அதற்காக வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலை குறி வைத்து இருக்கிறது. 

ஒரு பக்கம் வேல் யாத்திரை, சமூக வலைதளங்களில் எதிர்ப்பு அரசியல் என முழங்கி வரும் பாஜக மறுபுறம் சினிமா பிரபலங்களை கட்சியில் இணைக்கும் முயற்சியையும் தொடர்ந்து வருகிறது. அந்த வகையில் தமிழகத்தை பொறுத்த வரை பாஜகவின் இலக்கு ரஜினிகாந்த். 2014 மக்களவை தேர்தல் முதலே ரஜினிகாந்தின் ஆதரவை பெறவும், அவரை பாஜகவில் இணைக்கவும் எண்ணற்ற முயற்சிகள் நடைபெற்றன. 

ஆனால், கட்சி ஆரம்பித்தால் கூட்டணி கிடையாது. 234 தொகுதிகளிலும் தனித்தே களமிறங்குவோம் என ரஜினிகாந்த் தெரிவித்து இருந்தார். ஆனால், கொரோனா காரணமாக அவர் உடல் நிலையை காரணம் காட்டி அரசியலில் களமிறங்கத் தயங்கி வருகிறார். இதுகுறித்த ஒரு கடிதம் வெளியான போது, அந்தக் கடிதம் தனதில்லை. ஆனால் அதில் கூறப்பட்டுள்ள கருத்துக்கள் தனக்கு பொருந்தும் எனவும், விரைவில் ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசித்து விட்டு தனது நிலைப்பட்டை தெரிவிப்பதாகவும் கூறிவிட்டார்.

உடல்நலனை காரணம் காட்டி, ரஜினி அறிவிப்பு வெளியிட்ட மறுநாளே குருமூர்த்தி சென்று ரஜினியை சந்தித்து பேசினார். பாஜக அனைத்து வகையிலும் ரஜினிக்கு உதவத் தயாராக உள்ளது என்று குருமூர்த்தி எவ்வளவோ எடுத்து கூறியும், ரஜினி எப்போதும் போல மௌனத்தையே பதிலாக அளித்தார். இதனால் கழுதைப்படம் போட்டு துக்ளக் இதழில் ரஜினியை சீண்டினார் குருமூர்த்தி. 

இந்நிலையில் மத்திய அமைச்சர் அமித்ஷா வரும் 21-ம் தேதி தமிழகம் வர உள்ளார். அப்போது ரஜினியை சந்தித்து அரசியல் களம் காண்பது குறித்து பேசுவார் என்கிறார்கள். ஒருவேளை இந்த சந்திப்பில் ரஜினி அரசியலுக்கு வரப் போவதில்லை என்று உறுதியாக கூறிவிட்டால், அடுத்ததாக நடிகர் விஜய்யை வைத்து தாமரையை மலர வைக்க பாஜக திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. 

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாகவும், மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தையும் கொண்டுள்ள விஜய் போன்ற ஒருவரை வைத்து திராவிடக் கட்சிகள் சரியில்லை என்று சொல்ல வைத்தால், அதன் தாக்கம் பெரிதாக இருக்கும் என்று பாஜக கருதுகிறதாம். அதற்காகவே மாஸ்டர் படப்பிடிப்பின் போது விஜய்க்கு சொந்தமான இடங்களில் வருமான வரி சோதனை நடத்தப்பட்டது என்றும் கூறப்படுகிறது. அப்போது கைப்பற்றிய ஆவணங்களை கொண்டு தேர்தல் நேரத்தில் விஜய்க்கு அழுத்தம் கொடுக்கவும் பாஜக திட்டமிட்டுள்ளது.

எனவே அமித்ஷா தமிழக வருகை ரஜினிக்கு குறி தப்பினால் விஜய்க்கு பொறி வைப்பதாக இருக்கும் என்கிறார்கள். பாஜகவின் கனவு கைகூடுமா? பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.!