திமுகவை விமர்சித்து வீடியோக்களை சமூக வலைதளங்களில் பதிவிடும் மாரிதாஸ் ஒரே நாளில் ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறார்.  

காஷ்மீர் விவகாரத்தில் திமுகவின் அணுகுமுறையையும் கட்சித் தலைவர் ஸ்டாலினையும் பாஜக ஆதரவாளராக அறியப்படும் மாரிதாஸ் விமர்சனம் செய்ததாகக் கூறப்படுகிறது. மேலும் திமுகவை தடை செய்ய வேண்டும் என்றும், 370ம் சட்டப்பிரிவு நீக்கப்பட்டதால் திமுகவின் நிலைப்பாடு ஹிஸ்புதின், லஷ்கர் இ தொய்பா ஆகிய தீவிரவாத இயக்கங்களுக்கு ஆதரவாக இருப்பதாகவும் மாரிதாஸ் விமர்சனம் செய்ததாகக் கூறப்படுகிறது.

தி.மு.க மீது அவதூறு பரப்பும் நோக்கத்தில் பொய்யான தகவல்களோடு வீடியோ வெளியிட்ட மாரிதாஸ் மீது காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த செய்தி நேற்று வெளியான நிலையில் இன்று காலை முதல் ட்விட்டர் பக்கத்தில் #ISupportMaridhas என்ற ஹேஷ்டேக் டிரெண்டிங்கில் உள்ளது. தமிழக அளவில் இந்த ஹேஸ்டேக் முதலிடத்திலும் இந்திய அளவில் இரண்டாவது இடத்திலும் உள்ளது.  

இதில் பலர் மாரிதாஸிற்கு ஆதரவு தெரிவித்து தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர். பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா வெளியிட்டுள்ள பதிவில், ‘’ மாரிதாஸ் அவர்களின் பதிவால் திமுக விற்கு ரத்தக் கொதிப்பை ஏற்படுத்திய proximate provocation மார்ட்டின், டைசன், திருமுருகன் காந்தி, திமுக தொடர்பான பதிவே. இது ஏற்கனவே விசாரணையில் உள்ளது. பாவம் திமுக’’ என அவர் தெரிவித்துள்ளார். 

அதே நேரத்தில் மாரிதாஸ் கருத்திற்கு எதிர் கருத்து கொண்டவர்கள் #MentalMaridhas என்ற ஹேஷ்டேக்கை டிரெண்ட் செய்து வருகின்றனர். ஆக மொத்தத்தில் மாரிதாஸ் ஓவர் நைட்டில் உலகப்பிரபலமாகி விட்டார்.