மக்களுக்கு வேண்டிய விழிப்புணர்வையும் கொண்டு செல்ல முடியாமல் தவித்து வந்தோம் அதனை சிறப்பாக கொண்டு சென்று சேர்த்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு மாரிதாஸ் நன்றி தெரிவித்துள்ளார். 

தமிழக பாஜகவின் டுவிட்டர் பக்கத்தில் திருக்குறளை இயற்றிய திருவள்ளுவரின் உருவப்படத்தை காவி வண்ணத்தில் மாற்றி பதிவிட்டிருந்தது. இதற்கு பல்வேறு தரப்பில் கண்டன குரல்கள் எழுந்தன. இது தொடர்பாக கண்டனம் தெரிவித்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் ட்விட்டரில் ‘‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற வள்ளுவரை, காவிக்கூட்டம் தனது கட்சிக்கு கச்சை கட்டத் துணைக்கு அழைப்பது தமிழ்த் துரோகம்! எத்தனை வர்ணம் பூசினாலும், உங்கள் வர்ண சாயம் வெளுத்துவிடும். சாயம் பூசுவதை விடுத்து, திருக்குறள் படித்து திருந்தப் பாருங்கள்’’ என்று பாஜகவை கடுமையாக சாடினார். 

இந்நிலையில், இதுதொடர்பாக அரசியல் விமர்சகரான மாரிதாஸ் முகநூல் பக்கத்தில் " திருவள்ளுவர் சார்ந்து மதம் மாற்றும் அமைப்புகள் செய்த தந்திரத்தையும், துரோகங்களையும் அதில் மக்களுக்கு வேண்டிய விழிப்புணர்வையும் கொண்டு செல்ல முடியாமல் இருந்தோம். அதில் மக்களுக்கும் ஒரு ஆர்வம் இல்லை.

ஆனால் திமுக தலைவர் ஸ்டாலின் ஒரே ஒரு டிவிட் தான் போட்டார்; தமிழகத்தில் இருக்கும் அனைத்து மக்களுக்குக் கொண்டு சென்று சேர்த்துவிட்டோம் உண்மையை. அந்த வகையில் பல கோடிகள் செலவு செய்து செய்ய வேண்டிய பிரச்சாரத்தை எளிமையாக ஒரே டிவிட்டில் கொண்டு சேர்க்க உதவிய திமுக தலைவர் ஸ்டாலின் அவர்களுக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார். 

அப்புறம் அந்த மிசா ஆதாரத்தையும், முரசொலி மூலப்பத்திரத்தையும் கொஞ்சம் வெளியிட வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். அந்த பஞ்சாயத்தையும் கொஞ்சம் முடித்து வைத்தால் நன்றாக இருக்கும் என மு.க.ஸ்டாலினை கிண்டல் செய்யும் வகையில் கூறியுள்ளார்.