பத்மஸ்ரீ விருது மற்றும்  அர்ஜூனா விருது பெற்ற தமிழக விளையாட்டு வீரர்  மாரியப்பன் அவர்களுக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையின் விவரம்:-  

மாண்புமிகு அம்மாவின் அரசு தமிழ்நாட்டைச் சேர்ந்த திறமைமிக்க விளையாட்டு வீரர்களை கண்டறிந்து அவர்களுக்கு சர்வதேச தரத்தில் அமைக்கப்பட்டுள்ள விளையாட்டு அரங்கங்களில் பயிற்சி அளித்து உயரிய ஊக்கத்தொகை வழங்கி விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்க பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. 2016ல் பாரா ஒலிம்பிக் உயரம் தாண்டுதல் போட்டியில் தங்கப் பதக்கம், 2018ல் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் வெண்கலப் பதக்கம், மற்றும் 2019 உலக பாரா சாம்பியன்ஷிப் போட்டிகளில் வெண்கலப் பதக்கம் வென்று, இந்திய நாட்டிற்கும், தமிழ் நாட்டிற்கும் பெருமை சேர்த்த திரு.டி.மாரியப்பன் அவர்களுக்கு மத்திய அரசு பத்மஸ்ரீ விருது மற்றும் அர்ஜூனா விருது ஆகியவற்றை வழங்கி கவுரவித்தது. 

தமிழ்நாடு அரசும், திரு.மாரியப்பன் அவர்களுக்கு 2 கோடி ரூபாய் உயரிய ஊக்கத்தொகை அளித்தது. தற்போது மத்திய அரசு திரு மாரியப்பன் அவர்களுக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது அறிவித்தது நம் அனைவருக்கும் மகிழ்ச்சியான செய்தி ஆகும். இத்தருணத்தில் திரு.மாரியப்பன் அவர்களுக்கு என் சார்பாகவும், தமிழ்நாட்டு மக்கள் சார்பாகவும் மனமார்ந்த நல்வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சி தன் மெய்வருத்தக் கூலி தரும் என்ற திருவள்ளுவரின் வாக்கிற்கேற்ப திரு.மாரியப்பன் அவர்களின் மன உறுதியும் விடாமுயற்சியும் அவரது வெற்றிக்கு வித்திட்டது. 

எண்ணித் துணிந்தால் எதுவும் தடையல்ல என்பதற்கு சான்றாக திகழும் திரு.மாரியப்பன் அவர்கள் இடையூறுகளைத் தாண்டி சாதனை படைக்க விரும்பும் அனைவருக்கும் ஒரு முன்னுதாரணமாக திகழ்கிறார், திரு.மாரியப்பன் அவர்கள் மேலும் பல சாதனைகள் புரிந்து தமிழ் நாட்டிற்கும், இந்திய திருநாட்டிற்கும் பெருமை சேர்க்க வேண்டும் என மனமார வாழ்த்துகிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.