பிஎஸ்என்எல் , அதிவேக இணைப்புகளை சன் டி.விக்கு முறைகேடாக பயன்படுத்திய வழக்கில், சென்னை சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் தி.மு.க. முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதிமாறன் இன்று ஆஜரானார். அக்‍டோபர் 3ம் தேதி குற்றச்சாட்டு பதிவு செய்யப்படும் என நீதிமன்றம் அறிவித்துள்ளது. 

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில், மத்திய அமைச்சராக தயாநிதிமாறன் பதவி வகித்தபோது 2004ம் ஆண்டு ஜுன் மாதத்தில் இருந்து 2006ம் ஆண்டு டிசம்பர் மாதம் வரை பி.எஸ்.என்.எல். அதிவேக இணைப்புகளை முறைகேடாக சன் டி.வி. குழுமம் பயன்படுத்தியதில் பி.எஸ்.என்.எல். நிறுவனத்திற்கு ஒருகோடியே 78 லட்சம் ரூபாய் இழப்பீடு ஏற்பட்டதாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. 

இதுகுறித்து விசாரணை நடத்தும்படி சி.பி.ஐ.க்கு நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து, சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. 

இந்த வழக்கு தொடர்பாக தயாநிதிமாறன், அவரது சகோதரர் கலாநிதிமாறன், பி.எஸ்.என்.எல். தலைமை தொழில்நுட்ப அதிகாரி எஸ்.கண்ணன், சன் டி.வி. குழும எலக்ட்ரீஷியன் கே.எஸ்.ரவி, பி.எஸ்.என்.எல். முன்னாள் பொது மேலாளர் கே.பிரம்மநாதன், முன்னாள் துணை பொது மேலாளர் M.P.வேலுசாமி, தயாநிதிமாறனின் நேர்முக உதவியாளர் கவுதமன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு சென்னை சி.பி.ஐ. நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில், இந்த வழக்‍கில் சென்னை சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் தயாநிதிமாறன் இன்று ஆஜரானார். வரும் அக்‍டோபர் 3-ம் தேதி குற்றச்சாட்டு பதிவு செய்யப்படும் என நீதிமன்றம் அறிவித்துள்ளது.