காவல்துறையை முதல்வர் முதலில் அவர் கட்டுப்பாட்டில் வைக்க வேண்டும் என்று அமமுக பொது செயலாளர் டிடிவி.தினகரன் தெரிவித்துள்ளார்.
காவல்துறையை முதல்வர் முதலில் அவர் கட்டுப்பாட்டில் வைக்க வேண்டும் என்று அமமுக பொது செயலாளர் டிடிவி.தினகரன் தெரிவித்துள்ளார். இதுக்குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், கடந்த இரண்டு மாதங்களில் பல லாக்கப் மரணங்கள் தமிழகத்தில் நிகழ்ந்துள்ளன. முதல்வரின் கட்டுப்பாட்டில் காவல்துறை இல்லை என்பதையே இது உணர்த்துகிறது. வெற்று விளம்பரங்களை விட்டுவிட்டு காவல்துறையை முதல்வர் முதலில் அவர் கட்டுப்பாட்டில் வைக்க வேண்டும். இல்லையென்றால் இவர்கள் ஆட்சிக்கே ஆபத்தாகிவிடும். மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடக அரசு திட்ட அறிக்கை தாக்கல் செய்திருப்பது தமிழகத்திற்கு எதிரான நடவடிக்கை. எப்போது காவிரி பிரச்சனை வந்தாலும் திமுக கோட்டை விடும்.
இம்முறை கோட்டை விடாமல் மேகதாது அணை விவகாரத்தில் நீதிமன்றத்தின் மூலம் அணையை கட்டவிடாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு தமிழ்நாட்டு மக்களும், அனைத்து கட்சியினரும் ஆதரவாக இருப்பார்கள். தமிழக ஆளுநர் சனாதனம் குறித்து பேசியது குறித்த விவகாரத்தில் அரசின் தலைமை பொறுப்பில் இருப்பவர் பேசியிருக்க வேண்டாம் என்பது தான் எனது கருத்து. அதிமுகவை கைப்பற்றுவதில் சசிகலா சட்டப் போராட்டம் நடத்தி வருகிறார்.
அதில் அவர் வெற்றி பெற வேண்டும் என்பது எங்கள் விருப்பம். திமுக எல்லாருக்கும் எதிராக செயல்படுகிறது. மக்களை ஏமாற்றுவது தான் திராவிட மாடல் என ஸ்டாலின் சொல்வது நம்மை போன்ற திராவிடர்களாக பிறந்த அனைவருக்கும் தலைகுனிவு. ஆளும் கட்சிக்கு எதிரானவர்கள் அனைவருமே எதிர்கட்சிகள் தான். அதிமுகவும் எதிர்கட்சியாகத்தான் செயல்படுகிறது. ஆனால் மடியில் கனம் இருப்பதால் பயத்துடன் செயல்படுகிறது என்று தெரிவித்தார்.
