ஏழு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்கத்தினர் இன்று நடத்தி வரும் உண்ணாவிரதப் போராட்டத்தில் நடிகர் மன்சூர் அலிகான் பங்கேற்று தனது எதிர்ப்பை பதிவு செய்து வருகிறார்.

நடிகர் மன்சூர் அலிகான் நடிப்பில் வில்லத்தனம் காட்டினாலும், உண்மையில் தன்னால் முடிந்த உதவிகளை மக்களுக்கு செய்து வருகிறார். சேலம் மக்களின் குடிநீர் ஆதாரங்களாக  திகழும், அம்மாப்பேட்டை ஏரி  மற்றும் மூக்கன் ஏரி  ஆகியவற்றை சுத்தம் செய்ய கடந்து இரண்டு தினங்களுக்கு முன்பு சேலம் சென்றார். 

அங்கு மார்பளவுதண்ணீரில் இறங்கி, ஏரிகளில் பராமரிப்பு இன்றி  பரவிக் கிடந்த ஆகாயத்தாமரை செடிகளை அகற்றினார். மேலும் இவருடன் பொதுமக்களும் ஏரியில் இறங்கி வேலை செய்தனர்.

இதே போன்று காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகம் வந்த பிரதமர் மோடிக்கு கருப்புக் கொடி காட்டிய இயக்குநர்கள் பாராதிராஜா உள்ளிட்டோரை விடுதலை செய்ய வேண்டும் என போராட்டம் நடத்தி மன்சூர் அலிகான் சிறை சென்று வந்தார்.

இந்நிலையில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையால் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டு மக்கள் புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு நோய் பாதித்து அவதிப்படுவதாக கூறி அந்த ஆலையை நிரந்தரமாக மூடவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி ஆலையை சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள்  நடத்தி வரும் போராட்டத்தில் மன்சூர் அலிகான் பங்கேற்றுள்ளார்.

இதில்  தூத்துக்குடி நகர்பகுதி மற்றும் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்கத்தினர், பொதுமக்கள் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.