அரியானாவில் முதலமைச்சர் மனோகர் லால் கட்டார் தலைமையிலான பா.ஜ.க. ஆட்சி நடந்து வருகிறது.  அங்கு வருகிற 21ந்தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.  அதன் வாக்கு எண்ணிக்கை 24ந்தேதி நடைபெறும்.

தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள்  தீவிர பிரசாரங்களில் ஈடுபட்டு வருகின்றன.  இதில் சோனிபத் நகர் அருகே கர்கோடா என்ற இடத்தில் நடந்த பேரணி ஒன்றில் முதலமைச்சர் கட்டார் கலந்து கொண்டார்.  அவர் பேசும்பொழுது, எதிர்க்கட்சி தலைவர் பதவியில் இருந்து ராகுல் காந்தி விலகிய பின், கட்சிக்கு வெளியே இருந்து வேறு ஒருவரை தேர்வு செய்ய அக்கட்சி 3 மாதங்கள் முயன்றது.

வாரிசு அரசியலில் இருந்து அவர்கள் விலகுகின்றனர்.  இது ஒரு நல்ல விசயம் என நாங்கள் நினைத்தோம்.  ஆனால் இறுதியில் காங்கிரஸ் கட்சி சோனியா காந்தியை தேர்வு செய்தது என குற்றம்சாட்டினார்.


அதே காந்தி குடும்பம் மீண்டும் வந்துள்ளது என பேசிய அவர், பெரிய முயற்சி ஆனால் சிறிய லாபம் என்று அர்த்தம் வரும் வகையில் இந்தியில், கோடா பஹத், நிக்லீ சுஹியா என்ற பழமொழியை கூறினார். இதற்கு, ஒரு மலையை தோண்டியதில், அங்கு எலி கிடைத்துள்ளது என சரியாக பொருள்.

தொடர்ந்து பேசிய அவர், அதுவும் இறந்த ஒன்று என செத்த எலியை குறிப்பிடும் வகையில் கூறினார். அவரது இந்த பேச்சு காங்கிரஸ் கட்சியினரிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.  இதற்கு கண்டனம் தெரிவித்ததுடன், உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தி உள்ளது.

முதலமைச்சர்  கட்டாரின் பெண்களை பாதுகாப்போம் என்ற கோஷம் தோல்வி அடைந்து உள்ளது.  நாட்டில் அதிக குற்றங்கள் நடக்கும் 4வது மாநிலம்  என்ற இடத்தில் அரியானா உள்ளது என்று குற்றச்சாட்டு தெரிவித்து உள்ளது.

ஒரு முதலமைச்சரின்  இந்த பேச்சு முறையற்றது.  பா.ஜ.க.வின் பெண்களுக்கு எதிரான போக்கையே இது காட்டுகிறது என்றும் காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ டுவிட்டரில் பதிவு செய்யப்பட்டுள்ளது.