“மணிப்பூர் எம்.எல்.ஏ. ஒருவரின் தகுதிநீக்கம் குறித்து சபாநாயகர் 4 வாரத்தில் முடிவு எடுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் 11 எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்கம் குறித்து ஏற்கனவே நிலுவையில் இருக்கும் விவகாரங்கள் குறித்து சபாநாயகர் உடனடியாக முடிவு எடுக்க வேண்டும் என்ற கட்டாயம் எழுந்துள்ளது. இந்தத் தீர்ப்பு மிகச் சரியானது."

மணிப்பூர் எம்.எல்.ஏ.வை கட்சித் தாவல் சட்டத்தில் தகுதி நீக்கம் செய்யும் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்த நிலையில், தமிழகத்தில் 11 எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞரும் காங்கிரஸ் தலைவருமான கபில் சிபல் தெரிவித்துள்ளார்.


மணிப்பூரில் காங்கிரஸ் சார்பில் வெற்றி பெற்று பாஜகவில் சேர்ந்து அமைச்சரான ஷ்யாம் குமார் வழக்கில் உச்ச நீதிமன்றம் கடுமையான சில உத்தரவுகளைப் பிறப்பித்தது. கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் அவர் மீது நடவடிக்கை எடுக்காத சபாநாயகர், ஒரு மாதத்துக்குள் முடிவை அறிவிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் தனது உத்தரவில், “சபாநாயகர் ஓர் அரசியல் கட்சியைச் சேர்ந்தராக இருக்கிறார். அப்படி இருக்கும்போது எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்யும் அதிகாரம் அவரிடம் இருப்பது சரியாக இருக்குமா என்பதை நாடாளுமன்றம் விவாதித்து முடிவு எடுக்க வேண்டும். அதற்கான நேரம் வந்துவிட்டது. கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் எடுக்கப்படும் நடவடிக்கை நேர்மையாக இருக்க வேண்டும்.