திரிபுராவில் கடந்த 25 ஆண்டுகளாக ஆட்சி செய்துவந்த மார்க்சிஸ்ட் தலைமையிலான இடதுசாரி கூட்டணி ஆட்சியை வீழ்த்தி, இந்த முறை பாஜக வெற்றி பெற்றுள்ளது. இதையடுத்து அம்மாநில முதல்வராக இருந்த மாணிக் சர்க்கார் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.

நாட்டின் எளிமையான முதல்வராக அறியப்பட்ட மாணிக் சர்க்காரின் தலைமையிலான ஆட்சியை திரிபுரா மக்கள் புறக்கணித்துவிட்டனர். மிகவும் எளிமையான முதல்வர் மாணிக் சர்க்கார். அவருக்கென சொந்த வீடு கூட கிடையாது.  முதல்வராக இருந்ததால், அரசு சார்பில் ஒதுக்கப்படும் முதல்வருக்கான வீட்டில்தான் தனது மனைவியுடன் சர்க்கார் வசித்துவந்தார்.

பாஜக வெற்றி பெற்றதுமே அந்த வீட்டை சர்க்கார் காலி செய்துவிட்டார். தனக்கென சொந்த வீடு இல்லாததால், திரிபுரா தலைநகர் அகர்தலாவில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் தனது மனைவியுடன் சர்க்கார் குடியேறியுள்ளார். கட்சி அலுவலகத்தின் மேல்தளத்தில் உள்ள அறையில் தனது மனைவியுடன் குடியேறியுள்ளார். 

இப்படியொரு முதல்வரின் தலைமையிலான ஆட்சியை மக்கள் புறக்கணித்தது அதிர்ச்சியளிக்கக்கூடிய விஷயம்தான் என அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துவருவது குறிப்பிடத்தக்கது.