இந்தியாவில் கடந்த 25 ஆண்டுகளாக கம்யூனிஸ்டுகளின் கோட்டையாக திகழும் மாநிலம் திரிபுரா. அந்த மாநிலத்தின் இடதுசாரி முன்னணியின் அடையாளமாக திகழ்பவர் அம்மாநில முதல்வர் மாணிக் சர்க்கார். நாட்டிலேயே மிகவும் எளிமையான முதல்வர் என்ற பெருமையை உடையவர் மாணிக் சர்க்கார்.

இந்நிலையில், கடந்த மாதம் 18ம் தேதி திரிபுரா மாநில சட்டமன்ற தேர்தல் நடந்தது. நாளை வாக்குகள் எண்ணப்படுகின்றன. இந்தமுறையும் இடதுசாரி முன்னணியே ஆட்சியமைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் அனைத்து மாநிலங்களையும் கைப்பற்ற துடிக்கும் பாஜகவோ, நாட்டின் எளிமையான முதல்வராக அறியப்படும் மாணிக் சர்க்காரின் ஆட்சியில் திரிபுராவில் ஊழல் மலிந்திருப்பதாக குற்றம்சாட்டியது.

ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு மாணிக் சர்க்கார் அளித்த பேட்டியில், பாஜகவின் குற்றச்சாட்டுக்கு பதிலடி கொடுத்ததோடு பாஜகவையும் பிரதமர் மோடியையும் கடுமையாக விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள மாணிக் சர்க்கார், நமது நாடு, ஒரு கட்சியின் தலைவராக மட்டுமே செயல்படும் பிரதமரைக் கொண்டிருக்கிறது. அவருடைய கட்சியிடமிருந்து இத்தகைய மட்டரகமான அணுகுமுறையைத் தவிர்த்து வேறென்ன எதிர்பார்க்க முடியும்? தவறான தகவல்களை கூறி திரிபுரா மக்களை திசை திருப்பும் முயற்சியில் பாஜகவும் பிரதமர் மோடியும் ஈடுபட்டிருப்பதாக குற்றம்சாட்டினார்.