உள்ளாட்சித் தேர்தலில் பாமகவிற்கு மாம்பழம் சின்னம் ஒதுக்கப்பட்ட நிலையிலும் கூட தேர்தல் முடிவுகளை அறிவிக்கும் இணையதள பக்கத்தில் பாமக பெயரை மாநில தேர்தல் ஆணையம் சேர்க்கவில்லை.

கடந்த 2ந் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாக ஆரம்பித்தன. தமிழகத்திலேயே இல்லாத கட்சிகளான பகுஜன் சமாஜ், தேசியவாத காங்கிரஸ் போன்ற கட்சிகளின் பெயர்கள் தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் இருந்தன. ஆனால் முடிவுகளை அறிவிக்கும் பக்கத்தில் பாமகவின் பெயர் இல்லை. பாமக வேட்பாளர்கள் வெற்றி பெற்ற விவரம் மற்றவை என்கிற பகுதியில் தேர்தல் ஆணையத்தால் பட்டியலிடப்பட்டன.

அதே சமயம் தேமுதிகவின் பெயர் அந்த பக்கத்தில் இருந்தது. தேமுதிக வேட்பாளர்கள் வெற்றி பெற பெற்றி பெற தேர்தல் ஆணைய பக்கத்தில் உடனுக்கு உடன் அப்டேட் செய்யப்பட்டது. ஊரக உள்ளாட்சித் தேர்தலில் பாமக எத்தனை இடங்களில் வெற்றி என்கிற அதிகாரப்பூர்வ தகவல் தற்போது வரை இல்லை. ஆனால் தமிழகத்தில் நாங்கள் தான் மூன்றாவத பெரிய கட்சி என்று பாமக நிறுவனர் ராமதாஸ் பறைசாற்றிக் கொண்டார்.

மாவட்ட அளவிலான பாமக நிர்வாகிகள் கொடுத்த தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் இந்த கணக்கை ராமதாஸ் வெளியிட்டார். அதே சமயம் பாமக வேட்பாளர்கள் எத்தனை இடங்களில் வெற்றி என்கிற விவரத்தை அறிவிக்குமாறு மாநில தேர்தல் ஆணையத்திடம் விடுத்த கோரிக்கைக்கு சாதகமான எந்த பதிலும் கிடைக்கவில்லை. முன்னதாக ஊரக உள்ளாட்சித் தேர்தலில் பாமகவிற்கு மாம்பழம் சின்னத்தை பெறவும் அக்கட்சி மேலிடம் தவித்து போய்விட்டது.

சட்டமன்ற தேர்தலில் தோல்வி, நாடாளுமன்ற தேர்தலில் படுதோல்வி என அந்த கட்சி அடைந்த தோல்வியால் பாமகவிற்கான அங்கீகாரம் ரத்தாகிவிட்டது. இதனால் பாமகவிற்கு நிரந்தர சின்னம் இல்லை. இருந்தாலும் அதிமுக கூட்டணி என்பதால் பாமக வேட்பாளர்களுக்கு மாம்பழம் சின்னம் ஒதுக்கப்பட்டது. ஆனால் தேர்தல் முடிவுகள் விவகாரத்தில் மாநில தேர்தல் ஆணையம் திடீரென பாமக காலை வாரியுள்ளது. இதனை பாமக நிறுவனர் ராமதாஸ் கூட எதிர்பார்க்கவில்லை.

அதனால் தான் மாநில தேர்தல் ஆணையத்திற்கு எதிராக பாமக உயர்நீதிமன்றம் சென்றுள்ளது. இது குறித்த பின்னணியை விசாரித்த போது புத்தாண்டு தொடக்கத்தில் பாமக இல்லை என்றால் அதிமுக அரசு இல்லை என்று அன்புமணி பேசியதை சுட்டிக்காட்டுகிறார்கள். இப்படி வாய்க் கொளுப்பாக பேசினால் என்ன நடக்கும் என்பதை பாமகவிற்கு எடப்பாடியால் காட்டியுள்ளதாகவும் பேசிக் கொள்கிறார்கள்.