நெல்லை ராமையன்பட்டி அருகே இருக்கும் சேதுராயன்புத்தூரை சேர்ந்தவர் செல்லப்பா என்கிற அப்துர் ரகுமான். கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்னர் இஸ்லாமிய பெண்ணை திருமணம் செய்த இவர், தனது பெயரை மாற்றி இருக்கிறார்.

சில ஆண்டுகளுக்கு முன்னர் சென்னையில் குடும்பத்துடன் குடி வந்துள்ளார். அங்கு மீனம்பாக்கத்தில் கால் டாக்ஸி ஓட்டுநராக பணியாற்றி வருகிறார்.

இவர் முகநூலில் பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை அவதூறாக விமர்சித்து பதிவு செய்திருந்தார். அதில் 'பிரதமர் நரேந்திர மோடி, மத்திய மந்திரி அமித்ஷா ஆகியோர் தலைகளை வெட்டி எடுப்பவர்களுக்கு ரூ.1 கோடி பரிசு வழங்கப்படும்' என்று போடப்பட்டிருந்தது. இது வைரலாக பரவியது.

இதையடுத்து நெல்லை மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த முத்துப்பாண்டி என்பவர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதனடிப்படையில் சைபர் கிரைம் போலீசார் விசாரணையில் இறங்கினர். உடனடியாக அந்த அவதூறு பதிவை முடக்கினர். இதைத்தொடர்ந்து காயல்பட்டினம் பகுதியில் பதுங்கி இருந்த செல்லப்பா என்கிற அப்துர் ரகுமானை காவல்துறை அதிரடியாக கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் தடை செய்யப்பட்ட இயக்கத்துடன் அவருக்கு தொடர்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து சிறையில் அடைக்கப்பட்ட அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.