திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலினுடன் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தொலைபேசியில் பேசினார். அப்போது, பாஜக, காங்கிரஸ் அல்லாத மாற்று அணிக்கு ஆதரவளிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். 

திமுக காங்கிரஸ் கூட்டணி வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அமைந்துவிடக் கூடாது என்று தமிழக காங்கிரசில் தரப்பில் சிலர் வேலைபாடுகள் செய்து வருவதாக தெரிகிறது. 

ஆனால் எப்படியாவது கூட்டணி நிலைக்க வேண்டும் என கனிமொழி அதற்கான செயல்பாடுகளில் இறங்கியுள்ளார். அதாவது சென்னையில் நடந்த, திமுக மகளிரணியின் மகளிர் தின விழாவில் சிறப்பு விருந்தினராக ஆந்திராவை சேர்ந்த காங்கிரஸ் எம்.பி.யான ரேணுகா சௌத்ரியை அழைத்து வந்தார் கனிமொழி. 

இதனிடையே பாஜக, காங்கிரஸுக்கு மாற்றாக மூன்றாவது அணியை உருவாக்குவோம் என தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் திடீரென அழைப்பு விடுத்துள்ளார்.

தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் மூன்றாவது அணி அமைக்கலாம் என விடுக்கப்பட்ட அழைப்புக்கு மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி, ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவின் ஹேமந்த் சோரன் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், மம்தா திமுக செயல்தலைவர் ஸ்டாலினை தொலைபேசியில் தொடர்பு கொண்டார். அப்போது, தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் முன்வைத்த மாற்று அணி கோரிக்கையை ஆதரிக்க வேண்டும். பாஜக, காங்கிரஸ் அல்லாத மாற்று அணிக்கு ஆதரவளிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.