முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவு நாளான ஆகஸ்ட் 7 அன்று சென்னையில் உள்ள முரசொலி அலுவலகத்தில் அவருடைய சிலையை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி திறந்துவைக்க உள்ளார்.
தமிழகத்தில் நீண்ட காலம் முதல்வராக இருந்தவரும், திமுக தலைவராக 50 ஆண்டுகள் பதவி வகித்தவருமான கருணாநிதி கடந்த ஆண்டு ஆகஸ்ட் 7 அன்று காலமானார். 80 ஆண்டுகள் பொதுவாழ்க்கைக்கு சொந்தக்காரரான கருணாநிதியின் சிலையை கட்சி அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் கடந்த ஆண்டு டிசம்பரில் திறக்கப்பட்டது. சிலையை காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி திறந்து வைத்தார். 
இந்நிலையில் கருணாநிதியின் முதலாவது நினைவு தினம் ஆகஸ்ட் 7 அன்று கடைபிடிக்கப்பட உள்ளது. அவருடைய முதல் நினைவு தினத்தையொட்டி திமுக சார்பில் சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள முரசொலி அலுவலகத்தில் திறக்க முடிவு செய்துள்ளனர்.  சிலை திறப்பு விழாவுக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை அழைத்துள்ளனர். அவரும் அழைப்பை ஏற்றுக்கொண்டு சிலை திறப்பு விழாவில் பங்கேற்க உள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. 
இந்த விழா திராவிட கழக  தலைவர் வீரமணி தலைமையில் நடைபெற உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.