அனைத்து மாநிலங்களையும் கைப்பற்றிவிட வேண்டும் எதற்காக பாஜக இவ்வளவு பேராசை பிடித்து அலைகிறது என்று மேற்கு வங்க முதல்வரும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி தலைவருமான மம்தா பானர்ஜி கேள்வி எழுப்பியுள்ளார்.
கர்நாடகா அரசியல் நிலவரம் இடியாப்பச் சிக்கலைப் போல சிக்கிக்கொண்டிருக்கிறது. 16 காங்கிரஸ், மஜத எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமாவால் ஆட்டம் கண்டுவிட்டது குமாரசாமி அரசு. சபாநாயகர் ராஜினாமாவை ஏற்காததால், தற்போதைய பிரச்னை உச்ச நீதிமன்றம் சென்றுவிட்டது. ஒவ்வொரு நாளும் கர்நாடகாவில் காட்சிகள் மாறிக்கொண்டிருப்பதால், அங்கே அரசியல் குழப்பம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. இதன் பின்னணியில் பாஜக இருப்பதாக அக்கட்சியை எதிர்க்கட்சிகள் விமர்சித்துவருகின்றன.


இ ந் நிலையில் கர் நாடக நிலவரம் குறித்து மம்தா பானர்ஜியும் பாஜகவை தாக்கி கருத்து தெரிவித்திருக்கிறார். “தற்போது அரசியல் சாசனம் ஆபத்தில் இருக்கிறது. மும்பையில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கட்டாயப்படுத்தி பூட்டி வைக்கப்பட்டுள்ளனர். இப்படியெல்லாம் குதிரை பேரத்தை ஊக்குவித்தால் ஜனநாயகம் எப்படி உயிரோடு இருக்கும்?

 
பாஜகவுக்கு ஏன் இவ்வளவு பேராசை? எதற்காக பாஜக அலைகிறது? பாஜகவின் அணுகுமுறை புரியவே இல்லை. இந்தியாவில் எல்லா மாநிலங்களையும் கைப்பற்றிவிட வேண்டும் என்று பாஜக நினைக்கிறது. கர்நாடகாவில் வேலை முடிந்தால் அடுத்ததாக மத்தியபிரதேசம், ராஜஸ்தானுக்கு வருவார்கள். அரசுகளை கலைப்பதுதான் பாஜகவின் வேலையா?” என்று மம்தா பானர்ஜி காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார்.
 நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரத்தின்போது பாஜகவோடு 40 எம்.எல்.ஏ.க்கள் தொடர்பில் இருப்பதாக பிரதமர் மோடி பேசினார். தேர்தல் முடிவுக்கு பிறகு திரிணாமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் சிலர் பாஜகவுக்கு தாவினர். பாஜகவை கடுமையாக தாக்கி மம்தா பேச இதுவும் ஒரு காரணம்.