தேசிய அளவில் பாஜக கோலோச்சுவதையும் பாஜகவின் ஆதிக்கத்தையும் தடுத்து நிறுத்தும் முயற்சியில் மம்தா பானர்ஜி தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.

கடந்த 2014ம் ஆண்டு மத்தியில் ஆட்சியமைத்ததற்கு பிறகு நடந்த சட்டமன்ற தேர்தல்களில், பஞ்சாபை தவிர மற்ற அனைத்து மாநிலங்களிலும் பாஜக ஆட்சியமைத்துவிட்டது. அடுத்ததாக கர்நாடகாவையும் கைப்பற்ற பாஜக தீவிர முயற்சிகளை எடுத்துவருகிறது. தேர்தலை எதிர்நோக்கியுள்ள ராஜஸ்தான், மத்திய பிரதேச மாநிலங்களிலும் ஆட்சியை கைப்பற்றும் முனைப்பில் பாஜக உள்ளது.

தேசிய அளவில் பாஜகவின் ஆதிக்கத்தை வீழ்த்தி, அடுத்த ஆண்டு நடைபெற உள்ள மக்களவை தேர்தலில் பாஜகவை தோற்கடிக்க காங்கிரஸ் வலுவான கூட்டணியை உருவாக்க முயற்சித்து வருகிறது.

இதற்கிடையே தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆகியோர் மூன்றாவது அணி முயற்சியை முன்னெடுத்துள்ளனர். பாஜக, காங்கிரஸ் அல்லாத மூன்றாவது தேசிய அணியை உருவாக்குவதில் மிக தீவிரமாக செயல்பட்டு வருபவர் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தான்.

இதுதொடர்பாக பாஜக எதிர்ப்பு நிலையில் உள்ள மாநில கட்சி தலைவர்களுடன் ஆலோசனை நடத்திவருகிறார் மம்தா. டெல்லியில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், திமுக எம்பி கனிமொழி, சிவசேனா கட்சி எம்பி சஞ்சய் ராவத் ஆகியோரை சந்தித்து பேசினார்.

தேசிய அளவில் மூன்றாவது அணியை அமைத்தே தீர வேண்டும் என்ற உறுதியில் இருக்கும் மம்தா, அடுத்தகட்ட அரசியல் நகர்வாக ஏப்ரல் மாதம் 10, 11ல் சென்னை வருகிறார். சென்னையில் திமுக தலைவர் கருணாநிதி, செயல் தலைவர் ஸ்டாலின் ஆகியோரை சந்திக்கிறார். மூன்றாவது அணிக்கு ஆதரவு அளிக்குமாறு ஏற்கனவே ஸ்டாலினை தொலைபேசியில் தொடர்புகொண்டு ஆதரவு கோரிய மம்தா, நேரில் சந்திக்க உள்ளார்.