இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. இந்தியாவில் பாதிப்பு எண்ணிக்கை 29 ஆயிரத்தை நெருங்கிவிட்டது. 886 பேர் உயிரிழந்துள்ளனர். மகாராஷ்டிரா, குஜராத், டெல்லி, மத்திய பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் பாதிப்பு கடுமையாக உள்ளது. 

கேரளா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் பாதிப்பு கட்டுக்குள் வந்துள்ளது. கொரோனாவை தடுக்க ஊரடங்கு அவசியம் என்பதால் ஏற்கனவே ஏப்ரல் 14ம் தேதி வரை அமலில் இருந்த ஊரடங்கு, கட்டாயத்தின் பேரில் மே 3ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 

ஆனால் மே 3 வரை அமல்படுத்தப்பட்ட இரண்டாம் கட்ட ஊரடங்கின்போது, ஏப்ரல் 20க்கு மேல் சில தளர்வுகளை செய்யலாம் என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்தது. அதனடிப்படையில் சில மாநிலங்களில் ஊரடங்கு தளர்வுகள் செய்யப்பட்டுள்ளன.

இன்னும் கொரோனா பாதிப்பு தேசியளவில் கட்டுக்குள் வராததால் ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்பட வாய்ப்புள்ளது. அதுகுறித்து பிரதமர் மோடி, பல மாநில முதல்வர்களுடன் இன்று ஆலோசனை நடத்தினார். ஆனால் அனைத்து மாநில முதல்வர்களுடனும் பிரதமர் ஆலோசிக்கவில்லை. 

பிரதமருடனான ஆலோசனை கூட்டத்திற்கான கால அட்டவணை பட்டியலில் கேரள முதல்வர் பினராயி விஜயன், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஆகியோரின் பெயர்கள் இடம்பெறவில்லை. எனவே மம்தா பானர்ஜி பிரதமருடனான ஆலோசனையில் ஈடுபடவில்லை. 

இந்நிலையில், இன்று செய்தியாளர்களிடம் பேசிய மம்தா பானர்ஜி, ஊரடங்கு குறித்து மத்திய அரசுக்கே தெளிவில்லை. சுழற்சி அடிப்படையில் முதல்வர்கள், பிரதமர் மோடியுடன் பேச அழைக்கப்படுகிறார்கள். அதிலும் சில முதல்வர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. எனக்கு பேச வாய்ப்பு கிடைத்திருந்தால், பல கேள்விகள் கேட்டிருப்பேன். குறிப்பாக மேற்கு வங்கத்துக்கு மத்திய குழுவை ஏன் அனுப்பினீர்கள் என்று கேட்டிருப்பேன்.

ஊரடங்கு குறித்த புரிதல் மத்திய அரசுக்கு இல்லை. முன்னுக்கு பின் முரண்பட்ட கருத்துகளை மத்திய அரசு தெரிவிக்கிறது. உத்தரவுகள் தெளிவில்லாமல் உள்ளன. ஊரடங்குக்கு நான் ஆதரவுதான். ஆனால் ஊரடங்கை கடுமையாக அமல்படுத்துங்கள் என்று உத்தரவிடும் மத்திய அரசு, மறுபுறம் கடைகளை திறந்துகொள்ளுங்கள் என்று தளர்வுகள் செய்வது முன்னுக்கு பின் முரணாக உள்ளது. அப்படி செய்தால் எப்படி ஊரடங்கை தீவிரமாக பின்பற்றமுடியும்? முதலில் ஊரடங்கு குறித்த முழுமையான புரிதலோடு மத்திய அரசு செயல்பட வேண்டும் என்று மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.