'பா.ஜ.,வுக்கு ஆந்திரா, தமிழகம் போன்ற மாநிலங்களில் ஒரு சீட் கூட கிடைக்காது. பூஜ்ஜியம் தான் கிடைக்கும்' என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஆவேசமாகக் கூறியுள்ளார். 

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் பிரச்சாரம் செய்வதற்காக பா.ஜ.க தலைவர் அமித்ஷா சென்றிருந்தார். அப்போது, அவருக்கு திரிணாமுல் காங்கிரஸ், மார்க்ஸிஸ்ட் கட்சியின் மாணவர்கள் அமைப்புகள் கருப்பு கொடி காட்டி எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது, இருதரப்பினருக்கும் இடையே வன்முறை ஏற்பட்டது. தீ வைப்பு சம்பவங்களும் நடைபெற்றன. அந்த வன்முறையின் போது கொல்கத்தாவில் உள்ள வித்யாசகர் கல்லூரியில் இருந்த வித்யாசாகரின் சிலை அடித்து நொறுக்கப்பட்டது. மேற்கு வங்கத்தின் சீர்சிருத்தத்தில் மிகப் பெரும் பங்காற்றியவர் வித்யாசாகர்.

வித்யாசாகர் சிலை உடைக்கப்பட்டதற்கு மம்தா பானர்ஜி கடும் கண்டனம் தெரிவித்தார். திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் அனைவரும், வித்யாசாகரின் படத்தை டி.பியாக வைத்தனர். மேற்கு வங்கத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட மோடி, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர்தான் வித்யாசாகர் சிலையை உடைத்ததாக கூறினார். வித்யாசாகர் சிலை மீண்டும் கட்டமைக்கப்படும் என்றார்.

அதனையடுத்து பிரச்சாரத்தில் பேசிய மம்தா பானர்ஜி, ‘ஈஷ்வர் சந்திரா வித்யாசாகரின் சிலை உடைக்கப்பட்டற்கு காரணம் திரிணாமுல் காங்கிரஸ் எனக் கூறும் பிரதமர் மோடி, அதற்கான ஆதாரங்களை அளிக்க வேண்டும். அப்படி இல்லையென்றால் அவரை நான் சிறையில் தள்ளுவேன். எதற்கும் நான் பயப்பட மாட்டேன். கொல்கத்தாவில் மீண்டும் வித்யாசாகர் சிலையை கட்டமைத்து தருவதாக மோடி உறுதியளித்துள்ளார்.

எங்களுக்கு ஏன் பா.ஜ.கவின் பணம்? மேற்கு வங்காளத்திடமே போதுமான வளம் உள்ளது. சமூக வலைதளங்களில் போலியான செய்தியை பரவச்செய்து பா.ஜ.க வன்முறையை ஏற்படுத்த முயற்சி செய்கிறது. பா.ஜ.க,வுக்கு ஆந்திரா, தமிழகம் போன்ற மாநிலங்களில் ஒரு சீட் கூட கிடைக்காது. பூஜ்ஜியம் தான் கிடைக்கும். மகாராஷ்டிராவில் 20 இடங்கள் கிடைக்கும். இந்த தேர்தலில் பா.ஜ., 200 இடங்களை இழக்கும்’ என அவர் தெரிவித்தார்.