இங்கிலாந்தில் வீரியமிக்க புதிய உருமாற்ற கொரோனா வைரஸ் குறித்து தமிழகத்தில் எடுக்கவேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுப்பது தொடர்பாக டிசம்பர் 28-ம் தேதி மருத்துவ நிபுணர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்த உள்ளார். 

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவத்தொடங்கிய நிலையில் இந்தியாவிலும் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியது. இதையடுத்து கடந்த மார்ச் மாதம் இந்திய முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. பொதுமக்கள் வீட்டில் முடங்கினர் பொது போக்குவரத்து தடை செய்யப்பட்டது. பொதுமக்கள் கூடும் நிகழ்ச்சிகள், மத வழிபாடுகள், பொதுக்கூட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டது. ஷாப்பிங் மால்கள் பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டது. அவசியமின்றி பொதுமக்கள் வெளியில் வருவதற்கு தடைவிதிக்கப்பட்டது. 

இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா தொற்று குறைந்து வந்த நிலையில் இங்கிலாந்தில் திடீரென உருமாற்றம் பெற்ற கொரோனா வைரஸ் காரணமாக மீண்டும் தொற்று வேகமாக பரவ தொடங்கியுள்ளது. இதன் காரணமாக இங்கிலாந்தில் மீண்டும் முழு அடைப்பு அமல்படுத்தப்பட்டது. ஐரோப்பிய நாடுகளில் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டது. மேலும், இங்கிலாந்திலிருந்து இந்தியா திரும்பிய பயணிகளை கணக்கெடுத்து பரிசோதனை செய்து தனிமை படுத்தும் முயற்சிகளை மத்திய-மாநில அரசுகளின் சுகாதார துறைகள் எடுத்துவருகின்றன.

இந்நிலையில், இங்கிலாந்தில் உருமாறிய கொரோனா வைரஸ் தமிழகத்திற்குள் பரவாமல் தடுப்பது பற்றியும், தளர்வுகளுடன் கூடிய கொரோனா பொது முடக்கம் டிசம்பர் 31-ம் தேதியுடன் முடிவதால் கட்டுப்பாட்டை அதிகரிக்கலாமா? அல்லது மேலும் தளர்வுகளை அளிக்கலாமா? என்பது குறித்தும் முதல்வர் ஆலோசிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மகாராஷ்ரா மற்றும் கர்நாடகாவில் இரவு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.