Makkal Neethi Maiam party song published in chennai

இன்னொரு காந்தியை நாடாளுமன்றத்தில் தேட வேண்டாம் என்றும் அவர்கள் நிச்சயமாக சாலைகளில்தான் சென்று கொண்டிருப்பார்கள் என்றும் கூறிய மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், தமிழகத்தில் 50 ஆண்டுகாலம் பெரும் சீரழிவு நடந்துள்ளது என குற்றம்சாட்டினார்.

மக்கள் நீதி மய்யத்தின் ‘இது நம்மவர் படை’ என்ற கட்சி பாடல் வெளியீட்டு விழா சென்னை காமராஜர் அரங்கத்தில் நடைபெற்றது. கவிஞர் சினேகன் பாடல்களை எழுத, தாஜ்நூர் இசை அமைத்திருந்தார். இந்த பாடல் குறுந்தகட்டை மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டு பேசினார்.



நாங்கள் பணம் வாங்கமாட்டோம் என்று சொன்னால் மட்டும் போதாது. வாங்குபவர்களுக்கு அதனால் என்னென்ன நஷ்டம் உண்டாகிறது என்பதை எடுத்துச்சொல்ல வேண்டும். 5 ஆயிரத்துக்கும், 10 ஆயிரத்துக்கும் ஆசைப்பட்டு நம் உரிமைகளை விட்டுத்தருவது எவ்வளவு பெரிய நஷ்டம் என்பதை நாம் உணரவேண்டும் என கமல் குறிப்பிட்டார்..

இந்த பாடல்களே உங்கள் உற்சாகத்துக்கு தான். என் உற்சாகம் நீங்கள் சொல்லும் சேதிகளில், படும் கவலைகளில் இருந்துவரும் என தெரிவித்த கமல், . உங்கள் கோபம் அதில் எனக்கு தெரியவேண்டும். எனக்கும் அந்த கோபம் உண்டு. இரண்டையும் கலந்து புதிய சமையல் செய்வோம் என தெரிவித்தார்.



மாற்றத்தை நோக்கி என்று என்னை மட்டும் சுட்டிக்காட்டிவிடாதீர்கள். ஒரு ஆள் தேரை இழுக்கமுடியாது. மக்கள் நீதி மய்யமே நான் தான் என்று ஒவ்வொருவரும் நினைக்க வேண்டும். நான் சோர்ந்து படுத்துவிட்டால் இயக்கம் என்னாவது? என்ற பதற்றம் உங்களுக்குள் வரவேண்டும் என்றார்..



இந்த கட்சி மக்களுக்காகவும், ஒரு காரணத்துக்காகவும் தொடங்கப்பட்டது. அது என்ன காரணம்? என்று அனைவருக்கும் தெரியும். அந்த காரணம், அந்த குறை நீங்கும் வகையில் இந்த கட்சி இருந்தாக வேண்டும். அரை நூற்றாண்டு காலம் நடந்திருக்கிறது இந்த சீரழிவு. இன்னும் அரை நூற்றாண்டு காலம் இந்த மக்கள் நீதி மய்யம் செழிப்புடன் இருந்தால் தான் இந்த மாற்றம் ஏற்படும். அந்த அதிசய மரம் காய்க்கும் பழத்தை திண்பது எப்போது? என்று தெரியாது. ஆனால் விதை நாம் போட்டது என கமல்ஹாசன் தெரிவித்தார்..

இந்த விழாவில் கமல்ஹாசனிடம் கட்சி நிதியாக 2 பேர் தலா ரூ.50 ஆயிரம் வழங்கினர். கட்சி உயர்நிலைக்குழு உறுப்பினர்கள் சி.கே.குமரவேல், கமீலா நாசர், ஸ்ரீபிரியா, தங்கவேலு, சுகா உள்பட பலர் கலந்துகொண்டனர்.