மக்கள் நீதி மய்யம் ஒரு இடத்தில் கூட வெல்லவில்லை. இக்கட்சி சுமார் 1300 இடங்களில் போட்டியிட்டு ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை.
தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்த நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல், அதாவது மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கான தேர்தல் கடந்த 19ஆம் தேதி நடந்து முடிந்தது. இந்த தேர்தலில் திமுகவை தவிர அதிமுக, பாஜக, பாமக, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர், தேமுதிக, அமமுக உள்ளிட்ட கட்சிகள் தனித்து போட்டியிட்டன.

இதில் பேரூராட்சிகளில் பாஜக 150 க்கும் மேற்பட்ட வார்டுகளில் வென்றுள்ளது. அது போல் பாமகவும் கணிசமான இடங்களில் வென்றுள்ளது. கடந்த தேர்தல்களை காட்டிலும் இந்த முறை கமல்ஹாசன் தனது மக்கள் நீதி மய்யம் கட்சிக்காக கடும் பிரச்சாரம் செய்தார். நிறைய செய்தியாளர்களை சந்தித்தார். மக்கள் நீதி மய்ய வேட்பாளர்கள் வெற்றி பெற்று ஓராண்டுக்குள் அவர்கள கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாவிட்டால் ராஜினாமா செய்வது என வீடு வீடாக பத்திரத்தில் கையெழுத்திட்டு கொடுத்திருந்தனர்.
இத்தனை செய்த பிறகு மக்கள் நீதி மய்யம் ஒரு இடத்தில் கூட வெல்லவில்லை. இக்கட்சி சுமார் 1300 இடங்களில் போட்டியிட்டு ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. அது போல் சிவகங்கை நகராட்சியில் 1வது வார்டு ம.நீ.ம வேட்பாளருக்கு 1 ஓட்டுகூட கிடைக்கவில்லை. இந்த வேட்பாளரின் குடும்பத்தினர் கூட ஒரு வாக்கு கூட அளிக்கவில்லையா என்ற கேள்வி எழுகிறது.

இந்நிலையில், மக்கள் நீதி மய்யத்தின் அடுத்தக்கட்ட செயல்திட்டங்கள் குறித்து நிர்வாகிகளுடன் அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அவர்கள் இன்று மாலை ஜூம் செயலி வாயிலாக உரையாற்றுகிறார். இது தொடர்பாக,மக்கள் நீதி மய்யம் மாநில செயலாளர் இளங்கோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, ' நம்மவரின் நம்பிக்கையாளர்களுக்கு வணக்கம்.நம் தலைவர் அவர்கள் 26-02-2022 மாலை 06.00 மணிக்கு ஜூம் செயலி வாயிலாக தேர்தல்,தேர்தல் முடிவுகள் மற்றும் மய்யத்தின் அடுத்தக்கட்ட செயல்திட்டங்கள் குறித்து நம் மத்தியில் உரையாற்ற இருக்கிறார்.
இக்கூட்டத்தில் வேட்பாளர்கள்,தேர்தல் பொறுப்பாளர்கள்,மாநில, மண்டல,மாவட்டச் செயலாளர்கள்,மண்டல,மாவட்ட அமைப்பாளர்கள், பொருளாளர்கள்,அனைத்து பிற பொறுப்பாளர்கள் அனைவரும் அவசியம் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ஜூம் இணைப்பு கூட்டத்திற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னதாக அறிவிக்கப்படும்' என்று தெரிவித்துள்ளார்.
