Asianet News TamilAsianet News Tamil

தொழிலாளர்களை பிரித்தாளும் சூழ்ச்சி... யமஹா நிர்வாகத்திற்கு மக்கள் நீதி மய்யம் கண்டனம்!!

தொழிலாளர்களை பழிவாங்கும் நடவடிக்கைகள் எதையும் மேற்கொள்ளக் கூடாது என யமஹா நிர்வாகத்திற்கு மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தியுள்ளது. 

Makkal Needhi Maiam condemns yamaha management
Author
First Published Oct 19, 2022, 7:43 PM IST

தொழிலாளர்களை பழிவாங்கும் நடவடிக்கைகள் எதையும் மேற்கொள்ளக் கூடாது என யமஹா நிர்வாகத்திற்கு மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து மக்கள் நீதி மய்யம் வெளியிட்டுள்ள அறிக்கையில், காஞ்சிபுரம் மாவட்டம், ஒரகடம் அடுத்த வல்லம் வடகால் சிப்காட் வளாகத்திலுள்ள யமஹா இருசக்கர வாகன உற்பத்தி தொழிற்சாலை நிர்வாகம் அங்கு பணிபுரியும் தொழிலாளர்களை பிரித்தாளும் சூழ்ச்சி கொண்டு அவர்களுக்குள் பிரிவினையை உருவாக்கி பெரும்பான்மை தொழிலாளர்களின் ஆதரவு கொண்ட இந்திய யமஹா மோட்டார் தொழிலாளர்கள் சங்கத்திற்கு எதிராகவும், தொழிலாளர்களின் உரிமைகளுக்கு எதிராகவும் குள்ள நரித்தனத்தோடு செயல்பட்டு வருவதை மக்கள் நீதி மய்யம் நம்மவர் தொழிற்சங்க பேரவை வன்மையாகக் கண்டிக்கிறது. யமஹா தொழிற்சாலை நிர்வாகத்தோடு மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை நிர்ணயம் செய்யப்படும் ஊதிய உயர்வு ஒப்பந்தம் தொடர்பாக பெருபான்மை தொழிலாளர்களின் ஆதரவு கொண்ட இந்தியா யமஹா மோட்டார் தொழிலாளர்கள் சங்க நிர்வாகிகளிடம் பேச்சுவார்தை நடத்தாமல், தொழிலாளர்களை பிரித்தாளும் சூழ்ச்சியை கையாண்டு புதிதாக உருவாக்கப்பட்ட தொழிலாளர்களின் ஆதரவில்லாத, நிர்வாகத்தின் ஆதரவு கொண்ட போட்டி தொழிற்சங்கத்தோடு ஊதிய உயர்வு ஒப்பந்த பேச்சுவார்த்தையில் ஈடுபடுவது என்பது தொழிற்சங்க சட்டதிட்டங்களுக்கு எதிரானது மட்டுமல்ல அது தொழிலாளர் விரோதப் போக்காகும்.

இதையும் படிங்க: மேயருக்கான மாலையை சாலையில் வீசி கோபத்தை வெளிப்படுத்திய கோவை மாநராட்சி தூய்மைப் பணியாளர்கள்!!

யமஹா தொழிற்சாலை நிர்வாகம் தங்களின் ஆதாயத்திற்காக தொழிலாளர்கள் மத்தியில் பிளவை ஏற்படுத்தி போட்டி தொழிற்சங்கத்தை உருவாக்கிய நிலையில் நீதிமன்றம் பெரும்பான்மை ஆதரவு கொண்ட தொழிற்சங்க நிர்வாகிகளோடு தான் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என உத்தரவிட்ட பிறகும் கூட தொழிலாளர் விரோதப் போக்கினை கண்டித்து தொழிலாளர்களுக்கு ஆதரவாக நிற்க வேண்டிய தமிழக  அரசின் தொழிலாளர் நலத்துறை அவ்வாறு நடந்து கொள்ளாமல் அத்துறையின் அமைச்சர் சி.வி.கணேசன் யமஹா மோட்டார் தொழிற்சாலை நிர்வாகத்தோடு கொண்ட உறவு முறையால் அமைச்சருக்கும், தொழிற்சாலை நிர்வாகத்திற்கும் ஆதரவாகவும், பெரும்பான்மை தொழிலாளர்களுக்கு எதிராகவும் தொழிலாளர் நலத்துறையே நிற்பதையும், யமஹா தொழிற்சாலை விவகாரத்தில் நிகழ்த்தப்பட்டு வரும் தொழிலாளர் விரோத செயலையும் மக்கள் நீதி மய்யம் நம்மவர் தொழிற்சங்க பேரவை வன்மையாகக் கண்டிப்பதோடு தற்போது காலவரையற்ற உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்களோடு பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தை சுமூக உடன்பாடு கண்டு முடிவிற்கு கொண்டு வர தொழிலாளர் நலத்துறை முயற்சி மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறது.

இதையும் படிங்க: நீதிபதிகள் மீதே அவதூறு.. யூடியூப் சேனல்கள் மீது நடவடிக்கை எடுங்க.. டிஜிபிக்கு சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவு

மேலும் 856 நிரந்தர தொழிலாளர்கள் மட்டுமின்றி சுமார் 2500க்கும் மேற்பட்ட தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளுக்காகவும், தொழிற்சாலை நிர்வாகத்தின் சர்வாதிகார போக்கினை கண்டித்தும் 500க்கும் மேற்பட்ட யமஹா தொழிலாளர்கள் தொடங்கிய காலவரையற்ற உள்ளிருப்பு போராட்டம் என்பது தொழிலாளர்களின் உரிமைகளுக்காகவும், அவர்களின் வாழ்வாதாரத்தை காத்திடவும் தொடர்ந்து 9 நாட்களாக நடைபெற்று வருவதால் இந்தியா யமஹா மோட்டார் தொழிலாளர்கள் சங்கம் முன்னெடுத்துள்ள இந்த அறவழி போராட்டத்திற்கு சுமூக தீர்வு காண தொழிலாளர் நலத்துறையும், தொழிற்சாலை நிர்வாகமும் கூட்டாக இணைந்து யமஹா தொழிற்சாலை தொழிலாளர்கள் மத்தியில் ரகசிய வாக்கெடுப்பு நடத்த முன் வரவேண்டும். அந்த வாக்கெடுப்பில் பெரும்பான்மை தொழிலாளர்களின் நம்பிக்கையை பெறுகின்ற தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் மட்டும் ஊதிய உயர்வு ஒப்பந்தம் தொடர்பான அனைத்து வகை  சட்டரீதியான பேச்சுவார்த்தைகளையும் தொடர வேண்டும் எனவும், தொழிலாளர்களை பழிவாங்கும் நடவடிக்கைகள் எதையும் மேற்கொள்ளக் கூடாது எனவும் மக்கள் நீதி மய்யம் நம்மவர் தொழிற்சங்க பேரவை வலியுறுத்துகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Follow Us:
Download App:
  • android
  • ios