மானாமதுரை தனித்தொகுதி மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் ராமகிருஷ்ணனின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

தமிழகத்தில் மக்களவை மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் ஏப்ரல் 18-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. மானாமதுரை சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க., சார்பில் நாகராஜனும், தி.மு.க. சார்பில் இலக்கியதாசனும், அ.ம.மு.க.,சார்பில் மாரியப்பன் கென்னடி, மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் ராமகிருஷ்ணன் உட்பட பல்வேறு கட்சிகளை சார்ந்தவர்கள் போட்டியிட உள்ளனர். 

கடந்த 19-ம் தேதி வேட்பு மனுத்தாக்கல் நேற்று முன்தினம் அ.தி.மு.க., திமுக சார்பில் மானாமதுரை தாலுகா அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் திருவாசகத்திடம் தாக்கல் செய்தனர். கடைசி நாளான நேற்று அ.ம.மு.க., வேட்பாளர் மாரியப்பன் கென்னடி, மக்கள் நீதி மய்ய வேட்பாளர் ராமகிருஷ்ணன் உட்பட மொத்தம் 18 பேர் மனு தாக்கல் செய்திருந்தனர். தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்களின் பரிசீலினை இன்று தொடங்கியுள்ளது.

 

இந்நிலையில் மானாமதுரை தனித்தொகுதி மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் ராமகிருஷ்ணனின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேட்புமனு தாக்கலின் போது ஒரு படிவத்தில் கையெழுத்து இடாததால் ராமகிருஷ்ணன் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது. மானாமதுரை இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் போட்டியிடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. 

நேற்று பெரம்பலூர் மக்களவை தொகுதிக்கு மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் செந்தில்குமார் என்பவர் வேட்பாளரை அறிவிக்கப்பட்டிருந்தார். 3 மணிக்கு வேட்பு மனுதாக்கல் முடிந்த நிலையில் 3.20 மணிக்கு தாமதமாக வந்ததாலும், முறையான ஆவணங்கள் இல்லாததால் அவரது மனு நிராகரிக்கப்பட்டது.