மதுரை ஆதீனத்தை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அவர்களது கட்சியின் மாவட்ட செயலாளராக்கிவிடலாம் என முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்  பழ. கருப்பையா விமர்சித்துள்ளார். 

மதுரை ஆதீனத்தை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அவர்களது கட்சியின் மாவட்ட செயலாளராக்கிவிடலாம் என முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பழ. கருப்பையா விமர்சித்துள்ளார். அனைத்தையும் துறந்த துறவிகள் என கூறிக்கொண்டு வட்டி பணம் வசூலிப்பது தான் ஆதீனங்களின் வேலையா என்றும் அவர் சரமாரியாக விமர்சித்துள்ளார்.

திமுக ஆட்சிக்கு வந்தது முதல் பாஜக மற்றும் இந்துத்துவ அமைப்புகள் அரசின் நடவடிக்கைகளை கடுமையாக விமர்சித்து வருகின்றன. குறிப்பாக இந்து சமய அறநிலைத்துறை கலைக்கப்பட வேண்டும் என்றும், இந்து சமய அறநிலை துறையை கலைத்துவிட்டு ஆதினங்கள் மற்றும் மடங்களின் கட்டுப்பாட்டில் கோவில்களை ஒப்படைக்க வேண்டுமென்றும் கோரிக்கை வைத்து வருகின்றனர். இதே கோரிக்கையை மதுரை ஆதீனம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். சமீபத்தில் மதுரை பழங்கா நத்தத்தில், விஷ்வ இந்து பரிஷத் என்ற அமைப்பு நடத்திய துறவிகள் மாநாட்டில் கலந்து கொண்ட மதுரை ஆதீனம், திமுக அரசை கடுமையாக விமர்சித்தார். ஆதீனங்கள் அரசியல் பேசக்கூடாது என கூறுகிறார்கள், ஆனால் அரசியல்வாதிகளுக்கு கோவிலில் என்ன வேலை, முழுக்க முழுக்க கோவிலில் அரசியல்வாதிகள் நுழைந்து விட்டனர்.

அனைத்து கோயில்களிலும் அரசியல்வாதிகளே தக்கார்களாக உள்ளனர். இந்துக்களை பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என்றால் இந்துக்கள் அனைவரும் ஒன்றாக இருக்க வேண்டும். இந்து சமய அறநிலைத்துறை கொள்ளைக்கூட்டம் மக்கள் உண்டியலில் காசு போடாதீர்கள் என கடுமையான வார்த்தைகளில் அவர் பேசியிருந்தார். அவரின் இந்த பேச்சு கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ஆதீனம் அரசியல் பேசுவதை நிறுத்தாவிட்டால் அவருக்கு பதில் சொல்ல பல வழிகள் இருக்கிறது என எச்சரித்திருந்தார். இந்நிலையில் ஆதீனத்திற்கு ஆதரவாக பாஜக எச்.ராஜா மற்றம் அண்ணாமலை போன்றோர் குரல் கொடுத்து வருகின்றனர். இந்நிலையில் எழுத்தாளரும், இலக்கிய பேச்சாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான பழ.கருப்பையா மதுரை ஆதீனத்தை மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார்.

தமிழர்களின் மதம் என்பது சைவமும் வைணவமும் தான் திருஞானசம்பந்தர் நிறுவிய மடங்களில் ஒன்றுதான் மதுரை ஆதீனம், இந்து மதத்திற்கு ஆதீனத்திற்கும் சம்பந்தமே இல்லை, தமிழ்நாட்டில் இந்து மதமே இங்கு இல்லை, அப்படி இருக்கும்போது மதுரை ஆதினம் ஏதோ பாஜகவின் மாவட்ட செயலாளர் போல பேசிக் கொண்டிருக்கிறார். ஆதீனங்களின் பின்னணியை சொன்னால் அசிங்கமாகிவிடும், மதுரை ஆதீனம் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பாஜகவின் மாவட்ட செயலாளர் ஆகிவிட்டால் சரியாக இருக்கும், தங்களை முற்றும் துறந்த துறவிகள் என கூறிக் கொள்கிறார்கள் ஆனால் வட்டி பணம் சேர்ப்பதிலேயே ஆதீனம் குறியாக இருக்கிறார் இதுதான் ஆதீனமா என கடுமையாக விமர்சித்துள்ளார்.