பாஜக-சிவசேனா கூட்டணி ஆட்சி நடைபெறும் மகாராஷ்ட்ரா  மாநில சட்டசபைக்கும், பாஜக ஆட்சி நடைபெறும் அரியானா சட்டசபைக்கும் இன்று  தேர்தல் நடைபெற்று வருகிறது. இரு மாநிலங்களிலும் காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதியு மாலை 6 மணி வரை நடைபெறுகிறது.

288 உறுப்பினர்களை கொண்ட மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் பாஜக- சிவசேனா கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. பாரதீய ஜனதா 164 தொகுதிகளிலும், சிவசேனா 124 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தி உள்ளன.

காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் கூட்டணி மற்றொரு அணியாக போட்டியிடுகிறது. இதில் காங்கிரஸ் 147 இடங்களிலும், சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் 121 இடங்களிலும் களம் காண்கின்றன. இதுதவிர ராஜ்தாக்கரேயின் நவநிர்மாண் சேனா, பகுஜன் சமாஜ் உள்ளிட்ட கட்சிகளும் களத்தில் உள்ளன.

235 பெண்கள் உள்பட மொத்தம் 3,237 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். இங்கு போட்டியிடும் வேட்பாளர்களில் முதலமைச்சர்  தேவேந்திர பட்னாவிஸ் (நாகபுரி தென்மேற்கு), முன்னாள் முதலமைச்சர்கள்  அசோக் சவான் (போகர்) பிருத்வி ராஜ் சவான் (கராடு), ஆதித்ய தாக்கரே (மும்பை ஒர்லி) ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவார்கள்.

ஓட்டுப்பதிவையொட்டி, இரு மாநிலங்களிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. இரு மாநிலங்களிலும் பதிவாகும் வாக்குகள் வருகிற 24-ந் தேதி எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்படும். அப்போது, இரு மாநிலங்களிலும் ஆட்சியை பிடிப்பது யார்? என்பது தெரிந்துவிடும்.