கொரோனாவை எவ்வாறு கையாள்வது என்பது குறித்து மகாராஷ்டிரா மாநிலம் கேரளத்தை பார்த்து கற்றுக்கொள்ள வேண்டும் என அம்மாநில பாஜக தலைவர் சந்திரகாந்த் பாட்டீல் கூறியிருக்கிறார். கொரோனா விவகாரத்தில் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா அரசை கடுமையாக விமர்சித்து கருத்து கூறி வரும் அவர்,  ஆரம்பத்திலிருந்தே மகாராஷ்டிராவில் வைரஸை கட்டுப்படுத்த மாநில அரசு தவறிவிட்டது என குற்றஞ்சாட்டியுள்ளார். இந்தியாவில் கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இன்று காலை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட தகவலின்படி, இந்தியாவில் மொத்தம் 1,25,101 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் . இதுவரை கொரோனா வைரசால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,720 ஆக உயர்ந்துள்ளது எனவும் , 51 ஆயிரத்து 784 பேர் கொரோனா வைரசில் இருந்து மீண்டு குணமடைந்துள்ளனர் எனவும் தெரிவித்துள்ளது.  

நாடு முழுவதும் கொரோனா தாக்கம் பரவலாக இருந்து வரும் நிலையில் மற்ற மாநிலங்களைவிட மகாராஷ்டிராவை கொரோனா கொடூரமாக தாக்கி வருகிறது.    கடந்த 24 மணி நேரத்தில் மட்டும்  சுமார் 2 ஆயிரத்து 940 பேருக்கு அங்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அம்மாநிலத்தில் மொத்த பாதிப்பு 44 ஆயிரத்து 582 ஆக உயர்ந்துளளது.  கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் சுமார் 63 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் அங்கு பலி எண்ணிக்கை 1,517 ஆக உயர்ந்துள்ளது. அதே நேரத்தில் தமிழகத்தில் 14 ஆயிரத்து 753 பேருக்கும், குஜராத்தில் 13 ஆயிரத்து 268 பேருக்கும், டெல்லியில் 12 ஆயிரத்து 319 பேருக்கும்,  கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மகாராஷ்டிர பாஜக மாநிலத் தலைவர் சந்திரகாந்த் பாட்டீல், மகாராஷ்டிராவில் முதல் நபருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்ட அதேநாளில்தான் கேரளாவிலும் முதல் நபருக்கு வைரஸ் தொற்று கண்டுபிடிக்கப்பட்டது.  

ஆனால் தற்போது  70 நாட்கள் முடிவடைந்தும்  கேரளாவில் வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்திற்கு கீழ் தான் உள்ளது ,  மேலும் அங்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 12 க்கும் குறைவாகவே உள்ளது . ஆனால் மகாராஷ்டிராவில் நிலைமை அப்படி இல்லை ,  வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை 40 ஆயிரத்தை தாண்டியுள்ளது. வைரஸ் தாக்குதலுக்கு மாநிலத்தில் இதுவரை 1,517 பேர் பலியாகியுள்ளனர் . கொரோனா வைரசையும் அதனால் ஏற்படும் உயிரிழப்பையும் கேரளா கட்டுப்படுத்துவது போன்று மகாராஷ்டிரா அரசு கட்டுப்படுத்த தவறிவிட்டது  என அவர் கூறியுள்ளார். மேலும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக பாஜக ஆளும் கர்நாடக மாநிலத்தின் மருத்துவக் கல்வி அமைச்சர் டாக்டர் கே.சுதாகர் நேரடியாகவே கேரள சுகாதாரத்துறை அமைச்சர் சைலஜா விடும் ஆலோசனைகளைக் கேட்டுப் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது .