மகாராஷ்டிர மாநிலம் அகமது நகர் மாவட்டத்தில், விவசாயிகளிடமிருந்து நீரவ் மோடி குறைந்த விலைக்கு விளைநிலங்களை வாங்கி குவித்துள்ளார். நீரவ் மோடி வளைத்துப்போட்ட நிலங்களுக்கு மீண்டும் விவசாயிகள் உரிமை கோரி போராட்டம் நடத்தியுள்ளனர்.  

பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.11,500 கோடி அளவிற்கு நிதி மோசடியில் ஈடுபட்டுவிட்டு, வெளிநாட்டிற்கு தப்பியோடிய வைர வியாபாரி நீரவ் மோடி, நிதி மோசடியைவிடவும் பல மோசடிகளில் ஈடுபட்டுள்ளார். 

மகாராஷ்டிர மாநிலத்தின் அகமது நகர் மாவட்டத்தில் கண்டாலா என்ற பகுதியில், விவசாயிகளின் நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்களை சந்தை மதிப்பைவிட குறைந்த விலைக்கு வாங்கி குவித்துள்ளார். அடிமாட்டு விலைக்கு விவசாயிகளிடமிருந்து அந்த நிலங்களை வளைத்து போட்டுள்ளார் நீரவ் மோடி.

பஞ்சாப் நேஷனல் வங்கியில் நிதி மோசடியில் ஈடுபட்டு, தற்போது நீரவ் மோடி வெளிநாட்டில் பதுங்கியுள்ள நிலையில், அவரிடம் நிலத்தை அடிமாட்டு விலைக்கு விற்ற விவசாயிகள் மீண்டும் நிலத்திற்கு உரிமை கோருகின்றனர்.

இதற்கு அடையாளமாகத் தங்கள் வண்டிமாடுகளை அந்த நிலத்தில் நிறுத்தியும் கொடிகளை நாட்டியும் உரிமை கோரியுள்ளனர்.