தாமிரபரணி ஆறு மேற்கு தொடர்ச்சி மலையில் பாபநாசம் அணைக்கு மேலே அகஸ்திய மாமுனிவர் வாழ்ந்த தென்பொதிகை மலையில் பூங்குளத்தில் உற்பத்தியாகி, நெல்லை மாவட்டத்தில் 80 கிலோ மீட்டர் தூரமும், தூத்துக்குடி மாவட்டத்தில் 40 கிலோமீட்டர் தூரமும் ஓடி வங்கக்கடலில் கலக்கிறது.

பாபநாசத்தில் தாமிரபரணி சமதளத்துக்கு வருகிறது. அங்கு அகஸ்தியர் வழிபட்ட பாபநாச சுவாமி, உலகம்மன் கோவில் உள்ளது. இங்குள்ள படித்துறையில் சிவபெருமானே வந்து குளித்ததாக புராண வரலாறு கூறுகிறது.

தாமிரபரணியில் 30-வது கிலோமீட்டர் தொலைவில் மணிமுத்தாறு நதி சங்கமிக்கிறது. மேலும் இந்த ஆற்றில் காரையாறு, சேர்வலாறு, ராமநதி, கடனாநதி, பச்சையாறு, குற்றாலம் மலையில் உற்பத்தியாகி வருகின்ற சிற்றாறு ஆகிய ஆறுகளும் கலக்கின்றன. தாமிரபரணி ஆற்றங்கரையில் 9 நவகைலாச கோவில்களும், 9 நவதிருப்பதி கோவில்களும் உள்ளன. இந்த ஆற்றில் மொத்தம் 143 படித்துறைகளும், பல தீர்த்த கட்டங்களும் இருக்கின்றன.

தாமிரபரணி ஆற்றின் ராசியான விருச்சிக ராசிக்கு 12 வருடத்துக்கு ஒருமுறை குருபகவான் பெயர்ச்சி அடைகிறார். தற்போது விருச்சிக ராசிக்கு குருப்பெயர்ச்சி அடைந்ததையொட்டி, தாமிரபரணி புஷ்கர விழா இன்று தொடங்கி 23-ந் தேதி வரை நடக்கிறது. 144 வருடத்திற்கு ஒருமுறை வருகிற விழா என்பதால் இது மகா புஷ்கர விழா என அழைக்கப்படுகிறது.

நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் மகா புஷ்கர விழா பாபநாசம், அம்பை, கல்லிடைக்குறிச்சி, அத்தாளநல்லூர், திருப்படைமருதூர், முக்கூடல், அகஸ்தியர் தீர்த்தக்கட்டம் தென்திருப்புவனம், சேரன்மாதேவி, மேலசெவல், தேவமாணிக்கம், சுத்தமல்லி, கோடகநல்லூர், பழவூர், திருவேங்கடநாதபுரம், கொண்டாநகரம், நெல்லை குறுக்குத்துறை சுப்பிரமணியசுவாமி கோவில் படித்துறை, தைப்பூச மண்டபம் படித்துறை, நெல்லை வண்ணார்பேட்டை மணிமூர்த்தீசுவரம், எட்டெழுத்து பெருமாள் கோவில் கோசாலை ஜடாயூத்துறை, சீவலப்பேரி, முறப்பநாடு, ஆழ்வார்திருநகரி, தென்திருப்பேரை, ஏரல், ஆத்தூர், புன்னக்காயல் ஆகிய இடங்களில் உள்ள படித்துறைகளில் நடக்கிறது.

இங்கு புனித நீராட வட நாட்டில் இருந்து ஏராளமான சாமியார்கள் நெல்லைக்கு வந்துள்ளனர். மகா புஷ்கர விழாவில் 50 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் ஆற்றில் நீராடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று காலை 10 மணிக்கு மகா புஷ்கர விழா பாபநாசத்தில் தொடங்குகிறது. கவர்னர் பன்வாரிலால் புரோகித் விழாவை தொடங்கி வைக்கிறார்.

இதைத்தொடர்ந்து அங்கு நடக்கும் துறவிகள் மாநாட்டில் விழா மலரை வெளியிட்டு அவர் பேசுகிறார். தொடர்ந்து மாலை 5.30 மணிக்கு ஜடாயூ படித்துறையில் நடக்கின்ற மகா புஷ்கர விழா ஆரத்தியை கவர்னர் தொடங்கி வைக்க உள்ளார். இரவு 7.15 மணிக்கு திருப்படைமருதூரில் காஞ்சி சங்கரமடம் சார்பில் நடக்கும் மகா புஷ்கர விழாவில் அவர் கலந்து கொள்கிறார்.

தாமிரபரணி மகா புஷ்கர விழா நெல்லை எட்டெழுத்து பெருமாள் கோவில் கோசாலையில் நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. நேற்று காலை அங்குள்ள யாகசாலையில் அமைக்கப்பட்டுள்ள 54 யாக குண்டங்களில் தசமகா வித்யா யாகமும், மகாகாளி யாகமும் நடந்தது. மகா புஷ்கர விழாவையொட்டி நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டங் களை சேர்ந்த 7 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.