துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக திருப்போரூர் திமுக எம்.எல்.ஏ. கைது செய்யப்பட்ட விவகாரத்தில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் சிறு கண்டனம்கூட தெரிவிக்கவில்லை என்று தமிழக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.  
  நிலத் தகராறு - முன் விரோதம் போன்ற விவகாரத்தால் நடைபெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் திருப்போரூர் திமுக எம்.எல்.ஏ. இதயவர்மனை போலீஸார் கைது செய்துள்ளனர். அவர் தற்போது நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார். இந்த விவகாரம் பற்றி கருத்து தெரிவித்த அமைச்சர் ஜெயக்குமார், “திமுக வன்முறை கட்சி. அக்கட்சி துப்பாக்கி கலாச்சாரத்துக்கு சென்றுவிட்டது. திமுக ஆட்சிக்கு வந்தால், ஒவ்வொரு எம்.எல்.ஏ.வும் துப்பாகி வைத்திருப்பர். அவர்களைப் பார்த்து மக்கள் அஞ்சும் நிலை ஏற்படும்” என்று தெரிவித்தார்.


இந்நிலையில் இந்த விவகாரத்தில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வாய்த் திறக்கவில்லை என்று அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக அவர் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசியபோது, “ திமுக எம்எல்ஏ துப்பாக்கிச் சூடு நடத்திய விவகாரத்தில் அக்கட்சி தலைவர் ஸ்டாலின் அவர் மீது எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. சிறு கண்டனம் கூர தெரிவிக்கவில்லை. குறைந்தபட்சம் இது போன்ற செயல்களுக்கு ஊக்கம் அளிக்கவில்லை என்றாவது கூறியிருக்கலாம். அதைக்கூட அவர் சொல்லவில்லை.


அரசாங்கத்தை குறை சொல்வதை மட்டுமே தன் கடமையாக செய்துவருகிறார். இப்படியே சென்றால் தமிழகத்தில் மேலும் பல இடங்களில் துப்பாக்கி கலாச்சாரம் தலைதுாக்கிவிடும். இந்த விவகாரத்தில் சட்டம் தன் கடமையைச் சரியாக செய்துள்ளது. ஆனால், எதிர்க்கட்சி தலைவர் தன் கடமையை செய்வாரா?” என்று பாண்டியராஜன் கேள்வி எழுப்பினார்.