Mafa in mourning . The nest leaving the nest
தான் நினைத்தது நடக்கவில்லை என்ற மன வருத்தத்தில் இருக்கும் மாஃபா பாண்டியராஜன் எடப்பாடி அணிக்கு தாவும் மனநிலைக்கு வந்துள்ளதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.
ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுக இரண்டாக பிரிந்தபோது, ஒபிஎஸ்க்கு ஆதரவாக துணை வந்தது ஆட்சி பொறுப்பில் இல்லாத கே.பி முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், பி.எச் பாண்டியன் போன்றவர்களே.

ஆனால் திடீரென எடப்பாடி அணிக்கு பின்னடைவாக கல்வி அமைச்சராக இருந்த மாஃபா பாண்டியராஜன் அணி மாறியது பரபரப்பாக பேசப்பட்டது.

ஒபிஎஸ் அணிக்கு மாஃபா வந்த போது அவர் போட்ட கணக்கு பாஜக பெரிய அளவில் ஒபிஎஸ்க்கு கை கொடுக்கும். சசிகலா மேல் கடும் எதிர்ப்பு உள்ளதால் பெரும்பாலான எம்.எல்.ஏக்கள் ஒ.பி.எஸ் பக்கம் வந்து விடுவார்கள்.

பின்னர், ஒ.பி.எஸ் கை ஓங்கும்போது தாம் ஒரு வலுவான அமைச்சராக இருக்கலாம் என்று கணக்கு போட்டார். ஆனால் சட்டமன்றத்தில் எடப்பாடி பெரும்பான்மையை நிரூபித்து ஆட்சியை பிடித்த்தும் ஒ.பி.எஸ் அணிக்கு அதற்கு பிறகு எம்.எல்.ஏக்கள் யாரும் வராமல் போனது பெருத்த பின்னடைவாக இருந்தது.
ஒரு திரைப்படத்தில் கவுண்டமணி செந்திலிடம் ”டேய் நான் பத்தாம் கிளாஸ் படித்துள்ளேன்” என கூறுவார். அதற்கு செந்தில் ”அண்ணே நீங்கள் பத்தாம் கிளாஸ் ஃபெயில், நான் எட்டாம் கிளாஸ் பாஸ், உங்களை விட நாந்தான் பெரிய படிப்பு” என்று கூறுவார்.

அதுபோல் என்னதான் ஒபிஎஸ் பக்கம் தொண்டர்கள் இருந்தாலும் ஆட்சி எடப்பாடி கையில் இருப்பதால் ஒபிஎஸ் அணிக்கு பின்னடைவுதான். இதை நாள் செல்ல செல்ல மாஃபா உணர ஆரம்பித்தார். தொடர்ந்து, ஒபிஎஸ் அணிக்கு கூட்ட செலவுகள் கட்சி செலவுகளை செய்து அலுத்து போன மாஃபா இனிமேல் என்னால் செலவு செய்ய முடியாது என்று கூறியதாக கட்சி வட்டாரத்தில் ஒரு பேச்சு அடிபடுகிறது.
ஒரு கட்டத்தில் மாஃபா பாண்டியராஜன் மூலம் எடப்பாடி அணியில் இருந்து பத்துக்கும் மேற்பட்ட எம்.எல்.ஏக்களை இழுக்கும் எண்ணம் இருந்ததாகவும் அவ்வாறு எம்.எல்.ஏக்களை கையில் வைத்து கொண்டு எடப்பாடி அணியினரிடம் கட்சி இணைப்பு பற்றி பேசினால் அவர்களும் இறங்கி வந்தால் கட்சி ஒன்றாக இணைவதன் மூலம் தனது அமைச்சர் கனவு நிறைவேறும் என்றும் மாஃபா எடை போட்டதாக கூறப்படுகிறது.

ஆனாலும் இரு அணிகள் இணைவதில் பிரட்சனை ஏற்பட ஒபிஎஸ் குழுவை கலைத்தார். இதையடுத்து இரு அணிகளும் இணைந்து அதன்மூலம் ஏதாவது சாதிக்கலாம் என்ற மாஃபாவின் கனவு தகர்ந்து போனது.
மறுபுறம் ஒபிஎஸ் அணிக்குள்ளேயே மாஃபாவிற்கு மைத்ரேயன், கே.பி முனுசாமி போன்றோரால் நெருக்கடி வர இந்த சந்தர்ப்பத்தை எடப்பாடி அணியினர் பயன்படுத்த துவங்கியுள்ளதாக அந்த அணியினரே பேசி சிரித்து கொள்கிறார்கள். அமைச்சர்கள் மணிகண்டன், பென்ஜமின், போன்றோர் மாஃபாவிடம் தொடர்ந்து பேசி வருவதாக கூறப்படுகிறது.

சமீபத்தில் மணிகண்டன் அலுவலகத்தில் நன்றாக உணவருந்திய மாஃபா சிலமணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் அதிமுக வட்டாரத்தில் பேச்சு அடிபடுகிறது. அண்ணாமலை படத்தில் வரும் வசனம் போல் கூட்டி கழித்து பார்த்தால் கணக்கு சரியாக வருகிறது. கூடுவிட்டு கூடு பாய மாஃபா முடிவெடுக்கவும் வாய்ப்புள்ளது என்று ஒ.பி.எஸ் அணிக்குள்ளேயே பேச்சு அடிபடுகிறது.
