Madusoodanan press meet

தினகரனை அரசியலில் இருந்து துரத்தியடிப்போம்…ஆவேச மதுசூதனன்…

சசிகலா அணியின் வேட்பாளர் டி.டி.வி. தினகரனை பல்லாயிரக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து அவரை அரசியலில் இருந்ததே துரத்தியடிப்போம் என ஓபிஎஸ் அணி வேட்பாளர் மதுசூதனன் உறுதியாக தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதா கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மரணமடைந்ததையடுத்து அவரது ஆர்கே நகர் தொகுதி காலியானது. இந்த தொகுதிக்கு வருகிற ஏப்ரல் மாதம் 12-ம் தேதியன்று இடைத் தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

ஆர்,கே,நகர் தொகுதியில் அதிமுக சார்பில் அக்கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

திமுக சார்பில் ஆர்,கே.நகரைச் சேர்ந்த மருது கணேஷ் வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ளார்.

ஏற்கனவே ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா , எம்ஜிஆர்-அம்மா-தீபா பேரவை சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு அவர் தனது பிரசதரத்தை தொடங்கியுள்ளார்.

இந்நிலையில், ஓபிஎஸ் அணி சார்பில் முன்னாள் அமைச்சரும், ஆர்.கே.நகர் தொகுதியைச் சேர்ந்தவருமான மதுசூதனன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் நேற்று மதுசூதனனை வேட்பாளராக அறிவித்தார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மதுசூதனன், சசிகலா அணியின் வேட்பாளர் தினகரனை பல்லாயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என தெரிவித்தார்.

தனது வெற்றி அதிமுக எங்களுக்கே சொந்தம் என்பதை உறுதிசெய்யும் என்றும் தினகரனை அரசியலில் இருந்தே துரத்தியடிப்போம் என்றும் மதுசூதனன் உறுதிபடத் தெரிவித்தார்.

தான் இந்த மண்ணின் மைந்தன் என்றும் ஆர்.கே.நகர் தொகுதிக்காக நிறைய செய்துள்ளேன் என்றும் மதுசூதனன் தெரிவித்தார்.

கடந்த 1991-96 காலக்கட்டத்தில் ஆர்.கே.நகர் எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டு, கைத்தறித்துறை அமைச்சராகவும் பணியாற்றியவர் என்பதும், இன்றைய மூத்த அமைச்சர்கள், தலைவர்கள் பலருக்கும் இவர் அரசியல் கற்றுக் கொடுத்தவர் மதுசூதனன் என்பதும் குறிப்பிடத்தக்கது.