அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன்  திடீர்  வயிற்றுவலியால் சென்னை ஆயிரம் விளக்கு அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.  அவருக்கு தீவிர  சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அதிமுக வின் அவைத் தலைவராக இருப்பவர் மதுசூதனன். ஓபிஎஸ் அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றபோது அவரது படைத் தளபதிகளில் ஒருவராக இருந்தார். ஆர்.கே.நகர் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட மதுசூதனன் தோல்வி அடைந்தார்.

இதையடுத்து தனது தோல்விக்கு யார்?யார் காரணம்? என குற்றம் சுமத்தி அக்கட்சியின் தலைமைக்கு அவர் கடிதம் எழுதினார். அந்த கடிதம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதலமைச்சர் ஓபிஎஸ்ம் அவரை சமாதானப்படுத்தினர்.

ஆனாலும் மதுசூதனன் கடந்த சில நாட்களாகவே கட்சி நிகழ்சிகளில் பங்கேற்பதை தவிர்த்து வந்தார்.

இந்நிலையில் நேற்று அவருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. மதுசூதனனுக்குவயிற்று வலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் அவரது ஹீமோகுளோபின் அளவு குறைந்து விட்டதால் உடடினடியாக அவர் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.