முப்பத்திரெண்டு வயதான முஸ்தபாவின் மரணம் மனத்தை உலுக்கிக்கொண்டிருக்கிறது. இரண்டு நாள்களாகியும் அதைப்பற்றி எழுத முடியவில்லை. தொற்றுநோயாளிகளைக்கண்டு பயந்து, விலகி அவர்களை ஊரைவிட்டே விரட்டி, தான் தப்பித்து வாழ எல்லா வகையான உத்திகளையும் கையாண்ட அழுக்கேறிய, குரூர மனநிலையுள்ள மனிதர்களா நாம் என நம்மை நாமே கேட்டுக்கொள்ள வேண்டிய தருணம் இது.
 கேரளாவில் கூலிவேலை  பார்க்கச்சென்ற முஸ்தபா என்னும் இளைஞர் இரண்டு வாரங்களுக்கு முன் மதுரைக்குத் திரும்பி முல்லைநகரில் உள்ள அவர் அக்காவின் வீட்டில் இருந்துள்ளார். இரண்டுமூன்று நாள்களாக காய்ச்சல் கண்டிருந்ததால், வீட்டிலேயே ஒடுங்கிக் கிடந்துள்ளார். இவருக்குக் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது என்று அக்கம்பக்கம் எங்கும் செய்தி பரவியுள்ளது. சிலர் காவல்துறைக்கும் போன் போட்டுச் சொல்லியுள்ளனர். காவலர்களும் வீட்டுக்கு வந்துவிட்டனர். 

சிறிதுநேரத்தில் குட்டியானை எனச் சொல்லப்படுகின்ற டாட்டா ஏசி வண்டியில் முஸ்தபாவையும் அவர் அம்மாவையும் ஏற்றுகின்றனர்.
 அருவருப்பும் அவமானமும் ஊட்டுஞ்செயலாக அச்செயல் நடந்தேறி இருக்கிறது. இந்தக் காட்சியை அக்கம்பக்கத்தில் இருப்பவர்களால் செல்போனில் படமாக்கப்பட்டு “முல்லைநகரில் கொரோனா நோயாளி அழைத்துச் செல்லப்படுகிறார்” என்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு இருக்கிறது. முஸ்தபாவையும் அவர் அம்மாவையும் மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனையில்  பரிசோதித்து இருவருக்கும் கொரோனா தொற்று இல்லை என்பதை உறுதிசெய்து வீட்டுக்கு அனுப்பியுள்ளனர். அன்று இரவு தெற்குவாசல் பகுதியில் உள்ள தனது வீட்டுக்கு வந்து சேர்கிறார் முஸ்தபா.
 
இதற்கிடையில் முஸ்தபாவை முல்லைநகரில் டாட்டா ஏசியில் ஏற்றிய காட்சி சமூக ஊடகங்கள் எங்கும் பரவிவிட்டது. முஸ்தபா அவரது வீட்டுக்கு வருவதைப் பார்த்தவர்கள் சிறிதுநேரத்திலேயே ஒன்றுகூடி, “இவர் கொரோனா நோயாளி. இங்கு இருக்ககூடாது. இவர் இருந்தால் எங்களுக்கும் பரவிவிடும்” என்று பிரச்சனை செய்யத் தொடங்கியுள்ளனர். இரவு 12 மணியிலிருந்து 2 மணிவரை இந்தச் சம்பவம் நடந்துள்ளது. முஸ்தபா வீட்டைவிட்டு வெளியே வராமல் உள்ளேயே ஒடுங்கிக் கிடந்துள்ளார். கூட்டத்தினரை, காவல்துறை வந்து தலையிட்டுச் சமாதானப்படுத்தியுள்ளது.


 
அதிகாலையில் குப்பை லாரியில் முஸ்தபாவை ஏற்றி மீண்டும் அரசு மருத்துவமனைக்குக் கொண்டுவந்து இறக்கிவிட்டுள்ளனர். மருத்துவர்களோ, “நேற்றுத்தானே இவருக்கு கொரோனா இல்லை என்று சொல்லி அனுப்பினோம். மீண்டும் கொண்டுவந்திருக்கிறீர்கள்” என்று கூறியபடி மறுபடியும் பரிசோதித்து அன்று மாலை வீட்டுக்கு அனுப்பிவிட்டனர். மீண்டும் அவர் வீடுவந்து புறக்கணிப்பையும் அவமதிப்பையும் தொடர்ந்து சந்தித்துள்ளார். இந்நிலை தொடர்ந்து நீடிக்க, அவமானத்தின் அழுத்தமும் வெறுப்பும் முழுமையாகச் சூழ செவ்வாய்க்கிழமை காலை  இரயிலில் விழுந்து தன்னை மாய்த்துக்கொண்டார். காய்ச்சல் கண்ட அந்த இளைஞரைக் கொன்றது கிருமி அன்று; நமது சமூகம். என மதுரை எம்பி சு.வெங்கடேசன் ஆதங்கம் தெரிவித்துள்ளார்.