Madurai high court warns nithyananda in aatheenam case

மதுரை ஆதீனத்தின் 293வதி மடாதிபதி என்று கூறிக் கொள்ளும் விவகாரத்தில் வரும் பிப்ரவரி 2ம் தேதி பதில் மனு தாக்கல் செய்யாவிட்டால் கைது செய்ய உத்தரவிட நேரிடும் என்றும் ஆசிரிமங்களை எங்லலாம் ஒழித்துக்கட் நேரிடும் என்றும் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மதுரை ஆதீன மடத்துக்குள் நுழையவும், மடத்தின் நிர்வாகத்தில் தலையிடவும் நித்யானந்தாவுக்கு நிரந்தர தடை விதித்து உத்தரவிட வேண்டும் என்று மதுரை ஜெய்ஹிந்த்புரத்தைச் சேர்ந்த ஜெகதலபிரதாபன் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார். 

இந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்திருந்த நித்யானந்தா, தான் மதுரை ஆதீனத்தின் 293வது ஆதீனம் என்றும், ஒரு முறை ஆதீனமாக பதவியேற்றுக் கொண்டால், அவர்தான் வாழ்க்கை முழுவதும் ஆதீனமாகவே இருப்பார் என்றும், அதனை எந்த நீதிமன்றத்தாலும் ரத்து செய்ய இயலாது என்றும் தெரிவித்திருந்தார்.

இது குறித்து விளக்கம் அளித்த தமிழக அரசு, மதுரை ஆதீனத்தின் 292வது ஆதீனம் உயிருடன் இருக்கும் போது 293 வது ஆதீனம் என தன்னை எப்படி அடையாளம் கூறிக் கொள்ள முடியும் என்றும், மதுரை ஆதீனமாக நித்யானந்தாவை நியமித்த அறிவிப்பை திரும்பப் பெறுவதாக மதுரை ஆதீனம் ஏற்கனவே அறிவித்துவிட்டார் என்றும் வாதம் முன்வைக்கப்பட்டது.

இந்த வாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம், 293வது ஆதினம் என்று கூறி தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவை திரும்பப் பெற்றுக் கொண்டு நித்யானந்தா சார்பில் புதிய பதில் மனு தாக்கல் செய்ய நீதிபதி அறிவுறுத்தியிருந்தார். மேலும், 293வது ஆதீனம் என்று நித்யானந்தா தன்னைக் கூறிக் கொள்ளக் கூடாது என்றும், 293வது ஆதீனம் என்று கூறி தாக்கல் செய்த பதில் மனுவை திரும்பப் பெற வேண்டும் என்றும், அவ்வாறு பெறாவிட்டால் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஜனவரி 3ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

ஆனால், ஜனவரி 3ம் தேதி வழக்கு விசாரணைக்கு வந்த போதும் நித்யானந்தா தரப்பில் புதிய மனு தாக்கல் செய்யப்படவில்லை. கால அவகாசம் மட்டுமே கோரப்பட்டது.

இந்த நிலையில், அந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் இன்று விசாரணைக்கு வந்த போதும், நித்யானந்தா தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யாததால் அதிருப்தி அடைந்த நீதிபதி மகாதேவன், உடனடியாக நித்யானந்தாவைக் கைது செய்து நாளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு உத்தரவிட்டார்.

அப்போது குறுக்கிட்ட நித்யானந்தாவின் வழக்குரைஞர், ஒரு முறை மட்டும் கடைசியாக கால அவகாசம் அளிக்குமாறு வலியுறுத்தினார். இதனை ஏற்ற நீதிபதி, கைது உத்தரவை திரும்பப் பெற்றுக் கொண்டு பிப்ரவரி 2ம் தேதி பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் அளித்தார்.

அப்போது நீதிபதி மகாதேவன் வரும் பிப்ரவரி 2ம் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்யாவிடில் நித்யானந்தாவை கைது செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் . மதுரை ஆதீன மடாதிபதி விவகாரத்தில் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான மதுரை ஆதீனத்தை நித்யானந்தா கொச்சைப்படுத்துகிறார் என்றும் குற்றம்சாட்டினார்..

தொடர்ந்து கருத்துத் தெரிவித்த நீதிபதி, நித்யானந்தா ஆசிரமத்துக்கு எதிராக புகார்கள் வந்து கொண்டிருக்கின்றன. ஆன்மிகத்தை நித்யானந்தா கொச்சைப்படுத்தி வருகிறார். நித்யானந்தா ஆசிரமங்களை ஒழித்துக்கட்ட உத்தரவிட நேரிடும் என்று நீதிபதி மகாதேவன் எச்சரிக்கை விடுத்தார்.