சாத்தான்குளம் சம்பவத்தில் நீதி நிலைநாட்டப்படும் என்ற நம்பிக்கையை சிபிசிஐடி போலீசார் உருவாக்கியிருப்பதாக  உயர் நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது. சாத்தான்குளம் சம்பவம் தொடர்பான வழக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் இன்று காலை விசாரணைக்கு வந்தது அப்போது சிபிசிஐடி போலீசாருக்கு  சரமாரி கேள்விகளை முன்வைத்த நீதிபதிகள் இந்த வழக்கில் நீதி நிலைநாட்டப்படும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் சிபிசிஐடி போலீசாரின் நடவடிக்கைகள் அமைந்துள்ளது எனவும் கருத்து தெரிவித்துள்ளனர். 

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த தந்தை மகனின் மரணம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது, காவல் நிலையத்தில் வைத்து போலீசார் கடுமையாக தாக்கியதால் இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்ததாக குற்றச்சாட்டப்பட்டுள்ள இந்த வழக்கை தமிழக அரசு சி.பி.ஐ விசாரணைக்கு மாற்றியுள்ளது, அதேசமயம் காவல் நிலையத்தில் போலீசார் தாக்கப்பட்டு தந்தை-மகன் உயிரிழந்ததாக கூறப்படும் இந்த விவகாரம் தொடர்பான வழக்கை தாமாக முன்வந்து  உயர் நீதிமன்ற மதுரை கிளை விசாரித்து வருகிறது, இந்நிலையில் சாத்தான்குளம் தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது, இந்த வழக்கு விசாரணையின் போது இச்சம்பவம் தொடர்பாக சாட்சியளித்த  காவலர் ரேவதியிடம் நாங்கள் பேச இருக்கிறோம் என நீதிபதிகள் தெரிவித்தனர். 

அதே நேரத்தில் இந்த வழக்கில் முன்வந்து சாட்சியமளித்த காவலர் ரேவதிக்கு உரிய பாதுகாப்பும் ஊதியத்துடன் கூடிய விடுமுறையும்  வழங்க வேண்டுமென தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. அதேபோல் இந்த வழக்கு விசாரணையின் போது சிபிசிஐடி டிஎஸ்பி அனில்குமாரிடம் உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் சரமாரி கேள்விகளை முன்வைத்தனர், அதாவது, சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் இதுவரை எத்தனை பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது?  கைது செய்தவர்களை எந்த நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த உள்ளீர்கள் எனவும் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இந்த வழக்கில் நீதி நிலை நாட்டப்படும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் சிபிசிஐடி போலீசாரின் நடவடிக்கைகள் அமைந்துள்ளது எனவும் கருத்து தெரிவித்துள்ளனர்.