மதுரை வாக்குப்பதிவு மையத்திற்குள் பெண் தாசில்தார் நுழைந்ததால் பெரும் சர்ச்சை ஏற்பட்டது. சர்ச்சை ஏற்பட மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான நடராஜனே காரணம் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் வேட்பாளர் சு. வெங்கடேசன் சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையிட்டார்.

மேலும் மதுரை தொகுதியில் மறு வாக்குப் பதிவு நடத்த வேண்டும் எனவும்  மார்சிஸ்ட் கட்சி சார்பில்  மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதுகுறித்து விசாரணை நடத்திய நீதிபதிகள், தாசில்தார் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைத்துள்ள அறைக்கு சென்றாரா?. தாசில்தாரை சஸ்பெண்ட் செய்ய மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்ட தமிழக தலைமை தேர்தல் அதிகாரி மற்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடாதது ஏன்? என சரமாரியாக கேள்விகளை எழுப்பினார்கள்.

உதவி தேர்தல் அதிகாரி அறிவுறுத்தலின் பேரில் தாசில்தார், வாக்கு எண்ணிக்கை மையத்துக்கு சென்றார் என்றும், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அனுப்பிய பரிந்துரை குறித்து முடிவெடுக்க 2 நாள் அவகாசம் வேண்டும் என்றும் தேர்தல் ஆணையம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

இதனையடுத்து மதுரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வேட்பாளர் சு. வெங்கடேசன் தொடர்ந்த வழக்கில் மதுரை மாவட்ட ஆட்சியரும் ,தேர்தல் அதிகாரியுமான நடராஜனை மாற்ற சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

மேலும், உதவி தேர்தல் அதிகாரி, உதவி ஆணையர், காவல்துறை அதிகாரிகளையும் மாற்ற உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து மதுரையில் மறு வாக்குப் பதிவு நடத்துவது குறித்து பதில் அளிக்க தேர்தல் ஆணையத்துக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.