பழனி தண்டாயுதபாணி கோவிலுக்கு அறங்காவலர் குழு நியமனம் செய்வதற்கு இந்து சமய அறநிலைத்துறை விரைவில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

சென்னை மயிலாப்பூரை சேர்ந்த ரமேஷ் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், “பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் வளாகம் மற்றும் அதன் சார்பு கோவில்களை பராமரிக்கும் பணிக்கு டெண்டர் அறிவிப்பை கோயில் செயல் அலுவலர் ஆகஸ்ட் 20-ஆம் தேதி வெளியிட்டார். இந்த டெண்டர் அறிவிப்பில் முறைகேடு நடைபெற்றுள்ளதாகவும் இந்த அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதி ஜி .ஆர். சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது.

இந்த டெண்டர் அறிவிப்பில் உரிய விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை என கூறி டெண்டரை ரத்து செய்து நீதிபதி உத்தரவிட்டார். மேலும் பழனி தண்டாயுதபாணி கோவிலுக்கு அறங்காவலர் குழு நியமனம் செய்வதற்கு இந்து சமய அறநிலைத்துறை விரைவில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டார். மேலும் ஆந்திர பிரதேசத்தில் உள்ளது போல் கோவில்களை நிர்வாகம் செய்வதற்கு ஆன்மீகத்தில் பற்றுள்ளவர்கள் மற்றும் பண்பாளர்களை நியமிக்க பரிசீலனை செய்ய வேண்டும். கோவில் நிர்வாகத்திற்கு அரசியல்வாதிகளையும், அதிகாரிகளையும் நியமிப்பது எந்த விதத்திலும் வளர்ச்சிக்கு உதவாது என நீதிபதி கருத்து தெரிவித்தார்.