மதுரையில் இன்று ஒரே நாளில் புதிதாக 152 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது, 12 பேர் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

சென்னையை தொடர்ந்து மதுரையில் கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவி வருகிறது. கடந்த சில நாட்களாக தொடர்ந்து உயர்ந்து வரும் பாதிப்பு எண்ணிக்கையால், கடந்த ஜூன் 24 முதல் 30ம் தேதிவரை 7 நாட்களுக்கு முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. ஆனாலும், தொற்று அதிகரித்துக்கொண்டே செல்கிறது. நேற்று வரையில் மதுரையில் 1073 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, 9 பேர் உயிரிழந்துள்ளனர். 432 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 641 பேர் சிகிச்சை பெற்று வந்தனர். 

இந்நிலையில், இன்று ஒரே நாளில் புதிதாக 152 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மதுரையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,225 ஆக அதிகரித்துள்ளது. அரசு ராஜாஜி மருத்துவமனையில் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த 12 பேர் அடுத்தடுத்து உயிரிழந்தனர். மதுரையில் இதுவரை மொத்தமே 9 பேர் மட்டுமே பலியான நிலையில், இன்று ஒரே நாளில் 12 பேர் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.