Asianet News TamilAsianet News Tamil

மதுரை விமான நிலைய சர்ச்சை.. பொய் சொல்லும் மத்திய அமைச்சர்.. புள்ளி விவரங்களுடன் திருப்பியடிக்கும் வெங்கடேசன்.!

நாங்கள் உண்மைக்கு மாறாக பேசவேண்டிய தேவையில்லை. ஏனெனில் தேவைக்கு அதிகமாகவே எங்களிடம் உண்மைகள் இருக்கின்றன என்றும் மத்திய அமைச்சருக்கு எம்.பி.வெங்கடேசன் காட்டமாக பதிலளித்துள்ளார்.

Madurai airport issue - Madurai mp su venkatesan slams Civil Aviation Minister Jyotiraditya Scindia
Author
Chennai, First Published Dec 23, 2021, 11:27 AM IST

நாங்கள் உண்மைக்கு மாறாக பேசவேண்டிய தேவையில்லை. ஏனெனில் தேவைக்கு அதிகமாகவே எங்களிடம் உண்மைகள் இருக்கின்றன என்றும் மத்திய அமைச்சருக்கு எம்.பி.வெங்கடேசன் காட்டமாக பதிலளித்துள்ளார்.

மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாகவே இருந்து வருகிறது. இதுகுறித்து மத்திய அரசு இதுவரை எந்த முடிவையும் எடுக்கவில்லை. இந்தநிலையில், சமீபத்தில் விமானத்துறை அமைச்சர் ஜோதிராத்தியா சிந்தியாவை நேரில் சந்தித்த மதுரை எம்.பி. சு.வெங்கடேசன், மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். அதற்கு மத்திய அமைச்சர் மறுப்பு தெரிவித்துவிட்டதாக டுவிட்டரில் பதிவிட்ட வெங்கடேசன், மத்திய அரசுக்கு கடுமையான கேள்விகளை முன்வைத்தார். அந்த பதிவில், பல வடமாநிலங்களில் ஒரு சர்வதேச விமான நிலையம் தான் இருக்கிறது. தமிழகத்திற்கு நான்காவதாக மதுரைக்கு கேட்பது என்ன நியாயம்? தர முடியாது என்கிறார் விமானத்துறை அமைச்சர். கடந்த ஆண்டு மட்டும் தமிழகம் செலுத்திய GST வரி, 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் செலுத்திய மொத்த வரியை விட அதிகம். நாங்கள் 4 அல்ல… 14 கேட்க உரிமையும், தகுதியும் படைத்தவர்கள் என்று சு.வெங்கடேசன் ஆவேசமாக கூறியிருந்தார்.

Madurai airport issue - Madurai mp su venkatesan slams Civil Aviation Minister Jyotiraditya Scindia

இந்தநிலையில் எம்.பி.வெங்கடேசன் கருத்து அதிர்ச்சியளிப்பதாகவும் அவரை சந்தித்தபோது அப்படி கூறவே இல்லை என்றும் பதறியடித்து மத்திய அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியா விளக்கம் அளித்துள்ளார். மதுரை விமான நிலையத்தில் இருந்து சர்வதேச விமானங்கள் இயக்கப்படுவதாகவும் அவர் கூறியிருக்கிறார்.

 

இதுகுறித்து சு.வெங்கடேச வெளியிட்டுள்ள பதில் அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:

மதுரையை சர்வதேச விமான நிலையமாக அறிவிக்க வேண்டும் என்பது குறித்து ஒன்றிய அமைச்சர் ஜோதிராதித்யா எம்.சிந்தியா அவர்களை நானும், மாணிக்கம் தாகூர் எம்.பியும், சந்தித்த போது அவர் வெளிப்படுத்திய கருத்துகளை நாங்கள் வெளியிட்டது ஆழமான விவாதங்களை உருவாக்கி இருக்கிறது. இது குறித்து ஒன்றிய அமைச்சர் மீண்டும் தனது கருத்தை டிவிட்டரில்  வெளியிட்டுள்ளார். மிக்க மகிழ்ச்சி. என்னிடமும், மாணிக்க தாகூர் எம்.பி அவர்களிடமும் அவர் கூறியதையே நாங்கள் ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ளோம்.

தற்போது அவர் வெளியிட்டுள்ள பதிலில் நான் கூறிய குற்றச்சாட்டுகள் உண்மையற்றவை என்கிறார். மிகுந்த அதிர்ச்சியாய் இருக்கிறது என்கிறார். ஏன் இவ்வளவு அதிர்ச்சி ? எது உண்மையற்றது ? முதலில் வட இந்தியாவிலும், தென்னிந்தியாவிலும் ஒன்றுக்கு மேற்பட்ட சர்வதேச விமான நிலையங்கள் இருக்கும் மாநிலங்கள் உண்டு என்கிறார். இரண்டாவது சர்வதேச விமான நிலையமாக அறிவிக்க வேண்டுமெனில் அதன் பயணிகள் எண்ணிக்கை உள்ளிட்ட பல்வேறு காரணிகள் வேண்டுமென்கிறார். அரசு இன்னும் எத்தனை விமான நிலையங்களையும் திறக்கத் தயாராக இருக்கிறது என்கிறார். இவற்றையெல்லாம் தாண்டியது மூன்றாவதாகச் சொல்வது. மதுரையில் இருந்து ஏற்கெனவே சில சர்வதேச விமானங்கள் செல்கிறது. அப்படியிருக்க சர்வதேச விமான நிலையம் என்று அழைப்பதுதான் பிரச்சனையா? என கேட்கிறார். கூடுதலாக சர்வதேச விமானங்களை மதுரையில் இருந்து இயக்குவதற்கு ஒத்துழைக்கிறோம் என சொல்கிறார்.

Madurai airport issue - Madurai mp su venkatesan slams Civil Aviation Minister Jyotiraditya Scindia

இவ்வளவு சொல்லும் அமைச்சர் “மதுரையை சர்வதேச விமானநிலையம் ஆக்குவோம்” என்று மட்டும் சொல்ல மறுக்கிறார். அது தான் பிரச்சனையின் மையப்புள்ளியே. நேர் சந்திப்பின் போது “பல வடமாநிலங்களில் ஒரு சர்வதேச விமானநிலையம் தான்  இருக்கிறது.ஏற்கெனவே 5 மாநில முதல்வர்கள் இரண்டாவது சர்வதேச விமான நிலையம் வேண்டுமென கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கே இன்னும் ஏதும் செய்யவில்லை. இதில் ஏற்கெனவே தமிழகத்தில் 3 சர்வதேச விமானநிலையங்கள் இருக்க, நான்காவதாக மதுரையை சர்வதேச விமான நிலையமாக அறிவிக்க வாய்ப்பே இல்லை” எனத்தான் மிக அழுத்தமாக வாதிட்டார். அதைத் தான் வேறுவகையில் தற்போதும் கூறியுள்ளார். மதுரையில் இருந்து ஏற்கனவே வெளிநாடுகளுக்கு  விமானங்கள இயக்கப்படுகின்றன. அப்படியிருக்க அதனை சர்வதேச விமானநிலையம் என அறிவித்தால் தான் செல்லுமா? என்று கேட்கிறார். பிறகு என்ன பிரச்சனை. அறிவிக்க வேண்டியதுதானே? என்றால் அதற்கு பதில் இல்லை.

அபுதாபி, மஸ்கட், சிங்கபூர், கோலாலம்பூர் ஆகிய நகரங்களுக்கு மதுரையில் இருந்து விமானங்களை இயக்க முயற்சி செய்வதாக அமைச்சர் கூறிய செய்தியை உடனடியாக வெளியிட்டோம். அதை நாங்கள் மறுக்கவும் இல்லை ; மறைக்கவும் இல்லை. வரவேற்றோம். ஆனால் அமைச்சர் தான் பேசிய சில விசயங்களை மறுக்கிறார். சர்வதேச விமான நிலையம் எனில் அதற்கென அளவீடுகள் , ஒப்பந்தங்கள், அடிப்படைக் கட்டமைப்புகள், பயணிகளின்  எண்ணிக்கை உள்ளிட்ட பல்வேறு விசயங்கள் தொடர்புடையது என்கிறார். இதில் தான்  பிரச்சனை இருக்கிறது. கட்டமைப்பு மற்றும் பயணிகள் எண்ணிக்கை தான் பிரச்சனை எனில் நாடாளுமன்றத்தில் நான் பேசியதை மீண்டும் கேளுங்கள்.

Madurai airport issue - Madurai mp su venkatesan slams Civil Aviation Minister Jyotiraditya Scindia

தங்களிடம் நேரில் கூறியதையே மீண்டும் சொல்கிறோம்.கடந்த ஆண்டு உத்திரபிரதேசத்தின் வாரணாசி மற்றும் குஷிநகர் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து பயணப்பட்ட பன்னாட்டுப்பயணிகளின் எண்ணிக்கையை விட ஏறக்குறைய மூன்றுமடங்கு அதிகம் மதுரை விமான நிலையத்தில் இருந்து பயணப்பட்ட பன்னாட்டு பயணிகளின் எண்ணிக்கை. அதுமட்டுமல்ல நாடு முழுவதுமுள்ள 21 சர்வதேச (A) விமான நிலையங்களில், 11 விமானநிலையங்களில் இருந்து பயணம் செய்த பன்னாட்டு பயணிகளின் எண்ணிக்கையை விட மதுரை விமானநிலையத்திலிருந்து பயணம் செய்த பன்னாட்டு பயணிகளின் எண்ணிக்கை அதிகம். அது மட்டுமல்ல, ஒன்றிய விமானத்துறை அறிவித்துள்ள 10 கஸ்டம்ஸ் விமான நிலையங்களில் பன்னாட்டுப் பயணிகள் அதிகம் பயணிக்கும் விமானநிலையமாக தொடர்ந்து பல ஆண்டுகளாக முதலிடத்தில் இருப்பது மதுரை விமான நிலையமே. அதனால் தான் தொடர்ந்து பல ஆண்டுகளாக மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமானநிலையமாக அறிவியுங்கள் என்று கேட்கிறோம். நீங்களோ ஏதேதோ காரணம் சொல்கிறீர்கள்.

Madurai airport issue - Madurai mp su venkatesan slams Civil Aviation Minister Jyotiraditya Scindia

ஆனால் உபி யில் 2021 அக்டோபரில் குஷிநகர் சர்வதேச விமானநிலையத்தை திறக்கிறீர்கள். நவம்பர் மாதம் நொய்டா சர்வதேச விமான நிலையத்திற்கு அடிக்கல் நாட்டுகிறீர்கள். அடுத்த ஆண்டே அயோத்தியில் சர்வதேச விமான நிலையம் துவக்கப்படும் என அறிவிப்பு வெளியிடுகிறீர்கள். எந்த அளவீடு, கட்டமைப்பு, புள்ளிவிபரங்களின் அடிப்படையில் மூன்று சர்வதேச விமானநிலையங்கள் உ பி யில் துவக்கப்படுகின்றன? எந்த புள்ளிவிபரத்தின் படி எங்களுக்கு மறுக்கப்படுகின்றன? இந்தியாவின் எந்த வளர்ச்சி சார்ந்த மனிதவளக் குறியீடுகளிலும் முன்னணியில் இல்லாத மாநிலத்துக்கு இவ்வளவு முக்கியத்துவத்தை கொடுக்கும் நீங்கள், வளர்ச்சி சார்ந்த குறியீடுகள் பலவற்றில் முதன்மையாக இருக்கும் மாநிலம், GST பங்களிப்பில் நாட்டிலேயே இரண்டாவதாக இருக்கும் மாநிலமான தமிழகத்துக்கு ஏன் நியாயம் வழங்க மறுக்குறீர்கள்?

“அரசு இன்னும் எத்தனை விமான நிலையங்களையும் திறக்கத் தயாராக இருக்கிறது” என்றும் கூறும் அமைச்சர் அவர்களே! அதே வேகத்தோடு மதுரை விமானநிலையத்தை சர்வதேச விமானநிலையமாக அறிவியுங்கள். வரவேற்க தயாராக இருக்கிறோம். அதுவரை எங்கள் கோரிக்கைகள் தொடரும். நாங்கள் உண்மைக்கு மாறாக பேசவேண்டிய தேவையில்லை. ஏனெனில் தேவைக்கு அதிகமாகவே எங்களிடம் உண்மைகள் இருக்கின்றன. இவ்வாறு சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios