மதுரையில்  எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கு தமிழகத்துக்கு மத்திய அரசு இதுவரை 1 ரூபாய்கூட நிதி ஒதுக்கவில்லை என்றும், மேலும் இந்த மருத்துவமனையை கட்டி முடிக்க காலக்கெடு எதுவும் விதிக்கவில்லை என்றும் தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் தெரிய வந்துள்ளது.

நீண்ட இழுபறிக்குப் பின் மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவனைமனை அமைக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது. 750 படுக்கைகள் கொண்ட இந்த மருத்துவமனை 1500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 2 ஆண்டுகளில் அமைக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். ஆனால் தற்போது இந்த மருத்துவமனை அமைப்பதற்காக எந்த நிதியையும் மத்திய அரசு ஒதுக்கீடு செய்யவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன.

பாஜக  தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு 2014-ம் ஆண்டு மத்தியில ஆட்சிக்கு வந்தது. அதன்பின்னர்  நாடு முழுவதும் 13 இடங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என 2014-15, 2015-16 மற்றும் 2017-18  ஆகிய  மத்திய பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டது.

ஆனால் இதில் எந்தஒரு திட்டமும் முடிவடையும் வகையில் இல்லை என்றே தெரிகிறது. பாஜக  அரசு 4 ஆண்டுகளை தாண்டிய நிலையில், 13 எய்ம்ஸ் மருத்துவமனைகள் விவகாரத்தில் வாக்குறுதியை நிறைவேற்றுவதில் மோடி அரசு தோல்வியை தழுவியுள்ளது என்று தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் தெரியவந்துள்ளது. 

தமிழகத்தில் மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனையை அமைக்க மத்திய அரசு அனுமதியளித்துள்ளது.   இது தொடர்பாக இந்தியா டுடே செய்தி நிறுவனம்  தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெற்றுள்ள தகவலில் மருத்துவமனையை கட்டுவதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை என்றும் நிதி எதுவும் வழங்கப்படவில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

 மருத்துவமனையை கட்டிமுடிக்க அமைச்சரவையின் காலக்கெடு இறுதி செய்யப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அரசு ஆணை பிறப்பித்துள்ளது என தமிழக அரசின் சார்பில் 20-ம் தேதி தெரிவிக்கப்பட்டது. இந்தியா டுடே மத்திய அமைச்சகத்திடம் இருந்து பெற்ற ஆர்.டி.ஐ. பதிலில் 21-ம் தேதி குறிப்பிடப்பட்டுள்ளது.

மருத்துவமனைக்கான நிதி எதுவும் ஒதுக்கப்படாத நிலையில் எப்படி 2 ஆண்டுகளில் கட்டி முடிக்க முடியும் என கேள்வி எழுந்துள்ளது.