ஜெயலலிதாவுக்குப் பின் அ.தி.மு.க.வை தன் செய்கைகளாலும், பேச்சினாலும் வெச்சு செய்யும் மூத்த தலைகளில் முக்கியமானவர் நம்ம மதரக்காரர் செல்லூர் ராஜூ. தெர்மகோலில் துவங்கிய அவரது புரட்சி இதோ நாடாளுமன்ற தேர்தல் வரை இடைவெளியே இல்லாமல் துவைத்துக் கட்டிக் கொண்டிருக்கிறது கட்சியின் தன்மானத்தை. 

அதிலும் இப்போது மதுரை தொகுதியின் அ.தி.மு.க. வேட்பாளர் ராஜ் சத்யனுக்கு ஆதரவாக இவர் பிரச்சாரங்களில் விடும் வார்த்தைகளும், செய்யும் செயல்களும் வேட்பாளருக்கு தோல்வி பயத்தைக் கண் முன்னேயே கொண்டு வந்து நிறுத்தியிருக்கின்றன. தனது அப்பாவான மதுரை வடக்கு தொகுதி எம்.எல்.ஏ. ராஜன் செல்லப்பாவிடம் ‘யப்பா, இனியும் இந்த செல்லூரார் எனக்காக பிரச்சாரம் செய்யுறேன்னு வந்தார்னா, நான் சத்தியமா தோத்துடுவேன். அந்தளவுக்கு அக்குறும்பு பண்றார்.’ என்று கண்ணீரே வடித்துவிட்டாராம். 

அப்படி என்னதான்  செய்றார் செல்லூரார்? என்று ராஜ் சத்யனின் பிரசார வட்டாரத்தில் பேசியபோது “ஒண்ணா, ரெண்டா...படுத்தி எடுக்கிறாருங்க செல்லூரார். வேட்பாளர் அறிமுக நாளிலேயே ‘ஜனவரிக்கு முன்னாடி வரைக்கும் சர்வேல்லாம் எங்களுக்கு பாதகமா இருந்துச்சு. ஆனா பொங்கலுக்கு ஆயிரமும், அப்புறம் ஏழைகளுக்கு ரெண்டாயிரமும் கொடுத்தோம். இப்ப வெற்றிக் காத்து எங்க பக்கம் திரும்பிடுச்சு!’ன்னு ஏதோ அரசாங்கம் பணம் கொடுத்ததே தேர்தலுக்காகதான்னு பேசிட்டாரு. இந்த வீடியோவை தி.மு.க.காரங்க தேர்தல் கமிஷனிடம் காட்டி, எங்க வேட்பாளருக்கு சிக்கல் உருவாக்கப்போறதா தகவல் வந்துச்சு. 

ஆனால் நல்ல வேளையா அப்படி எதுவும் நடக்கலை. இதைத் தொடர்ந்து ‘அண்ணே கொஞ்சம் பார்த்து சூதானமா பேசுங்க. உங்க கையிலதான் என் மயன் வெற்றியே இருக்குதுணே’ என்று ராஜன் செல்லப்பா, அமைச்சரிடம் பொறுமையாக கோரிக்கை வைத்தார். அட, அதன் பிறகாவது செல்லூரார் அடங்கியிருக்கணும். ஆனால் அதுதான் இல்லை. நாங்களே பி.ஜே.பி. கூட்டணியில இருக்கிறோம். இஸ்லாமியர் வாழும் பகுதிகளுக்கு, எங்களுக்கு தோதான ஆட்களை கூட்டிட்டு போறதுதான் புத்திசாலித்தனம். ஆனா இவரோ யாரையோ கூட்டிட்டு போயி, என்னத்தையோ பேசி வைக்க, மக்கள் டென்ஷனாகி விரட்டி அடிச்சுட்டாங்க. 

ஒரு அமைச்சருக்கு இந்த அவமானம் தேவையா? அட அதுக்குப் பிறகும் அவர் மாறலை. மோடியை ‘புது மாப்பிள்ளை, சூப்பர் ஸ்டார்’ அப்படின்னு தேவையில்லாம புகழ்ந்து மக்களோட கடுப்பை சம்பாதிக்கிறது, கம்யூனிஸ்ட் வேட்பாளர்  வாபஸ் வாங்கப்போறதா சொல்லி தப்பான தகவலை கிளப்பிவிட்டு, அவங்களோட கண்டனத்துக்கு ஆளானதோடு, இதை தேர்தல் விதிமீறலாக தி.மு.க.வும்  தேர்தல் கமிஷனின் கவனத்துக்கு கொண்டு போயிருக்குது.

 

ஆக இவரோட அக்குறும்புகள் நாளுக்கு நாள் அதிகமாயிட்டே போறதாலே, இவராலேயே நாம தோத்துடுவோமுன்னு பயந்து போன வேட்பாளர் ராஜ் சத்யன் அதை அப்படியே தன்னோட அப்பாட்ட கொட்டிக் கலங்கிட்டார். ராஜன் செல்லப்பாவும் இதை மீண்டும் ஓ.பி.எஸ்., எடப்பாடியார் கவனத்துக்கு கொண்டு போயிட்டார். ஆனால் ஆளாளுக்கு தேர்தல் பிஸியில் இருப்பதால் செல்லூராரை தட்டிக் கேட்க ஆளில்லாம போச்சு.” என்று புலம்பினர். ஆனால் செல்லூரார் தரப்போ ‘வேலையை விட்டுப்போட்டு, செல்லப்பா மயன்  செயிக்கணுமுன்னு வந்து வேலை பார்த்தா இம்புட்டு குத்தங்கொற சொல்லுவீயளோ?’ என்று கடுப்பாகிறது. கஷ்டம்தான்!