மத்திய பிரதேச சட்டப்பேரவையில் இன்று நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்தப்பட வேண்டும் என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில் இதற்கு முன்னதாகவே முதல்வர் பதவியை கமல்நாத் ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். 

மத்தியப் பிரதேசத்தில் முதல்வர் கமல்நாத் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இம்மாநில காங்கிரசில் பலம் வாய்ந்த தலைவராக விளங்கிய ஜோதிராதித்யா சிந்தியா கட்சியின் மீது ஏற்பட்ட அதிருப்தியின் காரணமாக சமீபத்தில் விலகினார். இதனையடுத்து, பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பாஜகவில் இணைந்தார். பின்னர், ஜோதிராதித்யா சிந்தியாவின் ஆதரவாளர்களான 22 எம்எல்ஏ.க்களும் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர். 

இதற்கான ராஜினாமா கடிதத்தை மத்திய பிரதேச சபாநாயகருக்கு அனுப்பினார். இவர்களில், 6 அமைச்சர்களின் ராஜினாமா மட்டுமே ஏற்கப்பட்டுள்ளது. இந்த 22 பேரும் பெங்களூருவில் உள்ள சொகுசு விடுதியில், இம்மாநில பாஜக முதல்வர் எடியூரப்பாவின் கண்பார்வையில் பாதுகாப்பாக இருந்து வருகின்றனர். இந்நிலையில், 22 எம்எல்ஏ.க்களின் ராஜினாமாவை செய்ததையடுத்து காங்கிரஸ் மெஜாரிட்டியை இழந்து மைனாரிட்டி அரசாக இருந்து வருவதால் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என பாஜக ஆளுநரிடம் கோரிக்கை வைத்தது. 

இதனையடுத்து, சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தும்படி முதல்வர் கமல்நாத்துக்கு ஆளுநர் லால்ஜி டாண்டன் இருமுறை உத்தரவிட்டார். ஆனால், கொரோனா வைரஸ் காரணம் காட்டி நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தாமல் சபாநாயகர் சட்டப்பேரவையை ஒத்திவைத்தார். இதனால், கடுப்பான பாஜகவைச் சேர்ந்த முன்னாள் முதல்வர் சிவராஜ் சிங் வசுகான் உள்ளிட்ட 9 எம்எல்ஏ.க்களும் வழக்கு தொடர்ந்தனர். இதன் மீதான வழக்கு நேற்று உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற போது இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் மத்தியப் பிரதேச சபாநாயகர் பிரஜாபதி இன்று சட்டப்பேரவையை கூட்டி மாலை 6 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தி முடிக்க வேண்டும் என உத்தரவிட்டது. 

22 அதிருப்தி காங்கிரஸ் எம்எல்ஏ.க்கள் நம்பிக்கை வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாத பட்சத்தில், இன்றைய நம்பிக்கை வாக்கெடுப்பில் கமல்நாத் அரசு கவிழும் சூழல் ஏற்பட்டுள்ளது. ஆகையால், டெல்லியில் இடைக்கால தலைவர் சோனியா காந்தியுடன் ஆலோசனை நடத்திய பின்பு தனது முதல்வர் பதவியை கமல்நாத் ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.