மத்திய பிரதேச மாநில சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தற்போது நடைபெற்று வருகிறது. இதில் தொடக்கத்திலேயே பாஜக மற்றும் காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. தற்போது வரை காங்கிரஸ் 105 இடங்களும், பாஜக  103 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. 

தெலுங்கானா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சட்டீஸ்கர் மற்றும் மிசோரம் ஆகிய ஐந்து மாநில சட்டப்பேரவைகளுக்கான கடந்த தேர்தல் நடந்தது. மிகவும் பரபரப்பாக நடந்து முடிந்த இந்த 5 மாநில தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது. 

இதில் அதிக கவனம் ஈர்த்த மத்திய பிரதேச மாநிலத்தில் கடந்த நவம்பர் 28-ம் தேதி தேர்தல் நடந்தது. மத்திய பிரதேசத்தில் மொத்தம் 230 சட்டமன்ற தொகுதிகள் உள்ளது. மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி 2003-ம் ஆண்டில் இருந்தே ஆட்சியில் இல்லை. கடைசியாக அங்கு திக் விஜய் சிங் காங்கிரஸ் சார்பாக பலமான முதல்வராக இருந்தார். 

அதன்பின் உமா பாரதி தொடங்கி இப்போது சிவராஜ் சிங் சவுகான் வரை 15 வருடம் அங்கு பாஜக கட்சிதான் ஆட்சி செய்து வருகிறது. இதனால் பாஜக ஆட்சியை இந்த தேர்தலில் அகற்ற காங்கிரஸ் தீவிர முயற்சி எடுத்து வருகிறது. அங்கு நடந்த சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தற்போது நடந்து வருகிறது. காலை 10 மணிக்கு தொடங்கிய வாக்கு எண்ணிக்கையில் தற்போது முன்னணி நிலவரங்கள் வெளியாகி வருகிறது. தற்போது வரை காங்கிரஸ் கட்சி 105 இடங்களில், பாஜக 102 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. ஆட்சியை பிடிப்பதற்காக இருகட்சிகளுக்கும் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.