சென்னையில் கொரோனா பரவத் தொடங்கிய போதே கோயம்பேடு சந்தையை மூட வேண்டும் அல்லது இடமாற்றம் செய்ய வேண்டும் என்கிற கோரிக்கை முன்வைக்கப்பட்டது. ஆனால் வியாபாரிகள் எதிர்ப்பதாக கூறி அதனை சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் செய்யவில்லை. ஆனால் கோயம்பேடு சந்தை கொரோனாவின் ஹாட் ஸ்பாட்டாக மாறி சென்னை முழுவதும் நோய்த் தொற்று பரவ காரணமானது. இதனை தொடர்ந்து கோயம்பேடு சந்தைக்கு மூடி சீல் வைக்கப்பட்டது. பிறகு கோயம்பேடு வியாபாரிகளுக்கு திருமழிசையில் மாற்று இடம் ஒதுக்கப்பட்டது.


அந்த இடத்தை ஏற்க மறுத்து வியாபாரிகள் மீண்டும் கோயம்பேடு சந்தையை திறக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். இதற்கிடையே கோவை உள்ளிட்ட மேற்கு மாவட்டங்கள் மற்றும் பெங்களுர் போன்ற கர்நாடக நகரங்களுக்கு செல்ல புதிய பேருந்து நிலையத்தை திருமழிசையில் அமைப்பதற்கான டெண்டர் கோரப்பட்டது. திருமழிசைக்கு கோயம்பேடு சந்தை மாற்றப்பட்டது மற்றும் அங்கு பேருந்து நிலையம் அமைக்க துணை முதலமைச்சர் ஓபிஎஸ் வசம் உள்ள இலாகா சார்பில் டெண்டர் கோரப்பட்டதற்கும் முடிச்சு போட்டு விவாதம் எழுந்தது.

அதாவது கோயம்பேடு சந்தையை திருமழிசைக்கு மாற்றியும் அங்கு புதிய பேருந்து நிலையத்தை துவக்கியும் ரியல் எஸ்டேட் அதிபர்களுக்கு சாதகமான முடிவை ஓபிஎஸ் எடுத்துள்ளதாக விமர்சனங்கள் எழுந்தன. ஓபிஎஸ்சின் மகன்கள் ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டுள்ளதும் அப்போது சுட்டிக்காட்டப்பட்டது. இவ்வளவு விமர்சனங்களுக்கு மத்தியிலும் கோயம்பேடு சந்தை மீண்டும் திறக்கப்படாது என்பது போன்ற தகவல்களே வெளியாகி வந்தன. இதனை கண்டித்து வியாபாரிகள் சங்கம் போராட்டம் அறிவிப்பதும் பிறகு வாபஸ் பெறுவதுமாக கண்ணா மூச்சு ஆடி வந்தனர்.

இந்த நிலையில் திடீரென கடந்த திங்களன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து வியாபாரிகள் சங்கத்தினர் பேசினர். அப்போது புதன்கிழமைக்குள் இந்த விவகாரத்தில் முக்கிய முடிவு எடுப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சார்பில் வியாபாரிகளிடம் உறுதி மொழி அளிக்கப்பட்டது. மேலும் கோயம்பேடு சந்தை துணை முதலமைச்சர் ஓபிஎஸ் இலாகாவில் வருவதால் அவர் புதன்கிழமை சென்னை வந்ததும் இது குறித்து ஆலோசனை நடத்தி முடிவெடுப்பார் என்று தகவல் வெளியானது. ஆனால் கோயம்பேடு சந்தை விவகாரத்தில் எடப்பாடியார் தலையிட்டதை ஓபிஎஸ் தரப்பு விரும்பவில்லை என்கிறார்கள்.

இதனால் ஏற்கனவே திட்டமிட்டபடி புதன்கிழமை அன்று துணை முதலமைச்சர் சென்னை வரவில்லை. இதனால் டென்சன் ஆன முதலமைச்சர் தரப்பு அதிகாரிகளை அனுப்பி கோயம்பேடு சந்தையை ஆய்வு செய்ததாக கூறுகிறார்கள். இதனால் பதறிப்போன கோயம்பேடு சந்தையை பராமரித்து வரும் சென்னை பெருநகர குழும அதிகாரிகளும் அவசர அவசரமாக அங்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். இதற்கிடையே அதே நாளில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அதிமுக அவைத்தலைவர் மதுசூதனனை சந்தித்து பேசினார். இப்படி ஒரே நாளில் கட்சி மற்றும் ஆட்சி தொடர்புடைய விவகாரங்களில் எடப்பாடியார் தனி ஆவர்த்தனம் நடத்தியது அதிமுகவில் சலசலப்பை உருவாக்கியது.

இதனால் வேறு வழியில்லாமல் தேனியில் இருந்து ஓபிஎஸ் அவசரமாக சென்னை திரும்பியுள்ளார். மேலும் கோயம்பேடு சந்தையை அவர் நேரில் சென்று ஆய்வு செய்தததுடன் பிற்பகலில் சந்தை திறப்பு குறித்து அதிகாரிகளிடம் ஆலோசனையும் நடத்தியுள்ளார். இதனை தொடர்ந்தே செப்டம்பர் 28ந் தேதி கோயம்பேடு சந்தை திறப்பு என்று அறிவித்துள்ளார்கள். இதுநாள் வரை ஓபிஎஸ் தொடர்புடைய விவகாரங்களில் ஒதுங்கியே இருந்த எடப்பாடியார் தரப்பு கோயம்பேடு சந்தை விவகாரத்தில் நெருக்கடி கொடுத்து வியாபாரிகள் கோரிக்கையை நிறைவேற்றிவிட்டதையே இது காட்டுகிறது.