Madhusoodhanan wrote letter to edappadi palanisamy
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் சட்டமன்ற தொகுதியான ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் இரட்டை இலைச் சின்னத்தில் போட்டியிட்ட அதிமுக மற்றும் திமுக ஆகிய பலம்பொருந்திய கட்சிகளை முறியடித்து சுயேட்சை வேட்பாளரான தினகரன் வெற்றி பெற்று இருப்பது தமிழக அரசியலில் ஒரு புதுத் திருப்பம் என்று வர்ணிக்கப்பட்டது. தினகரன் 89 ஆயிரத்து 013 வாக்குகள் பெற்று பெற்று இரண்டாவது இடத்தில் இருக்கும் மதுசூதனனை விட 40 ஆயிரத்து 701 வாக்குகள் வித்தியாசத்தில் வாகைசூடினார். இதற்கு முன் இதே தொகுதியில் போட்டியிட்ட ஜெயலலிதா 39,545 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். தற்போது இன்னும் கூடுதலான வாக்கு வித்தியாசத்தில் தினகரன், தமிழக அரசியலில் புதிய சக்தியாக உருவெடுத்திருக்கிறார் என்று அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன.
ஆர்.கே.நகர் தேர்தல் தோல்விக்குப்பின் வாய்திறக்காத அவைத்தலைவர் மதுசூதனன் முதலமைச்சர் பழனிசாமிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில் தன்னுடைய 14 கேள்விகளுக்கு உரிய பதிலைத் தரும்படி கூறியிருக்கிறார்.
.jpg)
ஆளும் கட்சியியோ அதிர வைத்த அந்த கடிதத்தின் ஒரு பகுதி இதோ...
"நான் தோற்றதற்கு என்ன காரணம், யார் காரணம், பதில் சொல்லுங்கள் மிஸ்டர் பழனிசாமி?
அம்மா மறைவுக்குப் பின்னர் கழகம் இரண்டானது. தொண்டர்கள் தவித்தனர். நாம் தனித்தனியாக இருவேறு அணியாகக் கிடந்தோம். அப்படிக் கிடந்த அணிகளை ஒன்றாக்கி கட்சியை வலுவாக்கியதுதான் நான் செய்த தவறா?
நம்முடைய பிரிவால் எதிரிகள் வலுப்பெற்றுக் கழகத்தை சிதைத்து விடுவார்கள் என்று கருதி நானும் அண்ணன் கே.பி.முனுசாமியும்தானே இந்தப் பேச்சு வார்த்தைக்கே பாலம் அமைத்துக் கொடுத்தோம்?
அணிகளை இணைய விடாமல், எதிரணிகளுக்கு பலம் சேர்க்கும் விதமாக இணைப்பைத் தடுத்தவர், இன்றுவரை உங்கள் நம்பிக்கைக்கு உரிய மந்திரிதானே? தொகுதியில் நான் தோற்க கடமை உணர்வுடன் செயலாற்றியவரும் அந்த மந்திரிதானே?
.jpg)
உங்களுக்கு அனைத்தும் தெரியும். நான் புதிதாகச் சொல்ல வேண்டியது ஒன்றும் இல்லை. ஆர்.கே.நகர் தொகுதியில் நான் வெற்றி பெற்றிருந்தால் அது கழகத்தின் வெற்றி, அம்மாவின் வெற்றி, புரட்சித்தலைவரின் வெற்றி, இரட்டை இலையின் வெற்றி. நான் தோற்றது இவை அத்தனையும் தோற்றது போல்தானே?
இந்த நிமிடம் வரையில் கழகம், இடைத் தேர்தலில் தோற்றது குறித்து எந்த ஆய்வுக் கூட்டமும் நம் தரப்பிலிருந்து நடத்தப்பட வில்லையே அது ஏன்? அம்மா இருந்திருந்தால் இப்படியெல்லாம் நடந்திருக்குமா? ஆர்.கே. நகர்த் தொகுதிக்கான தேர்தலில் வார்டு 38-ல் நான்கு பாகமும், 43-ல் ஐந்து பாகமுமாக 9 பாகங்கள் மந்திரி ஜெயகுமார் பொறுப்பில் கொடுத்தீர்களே... ஒன்பதாயிரத்து, 500 வாக்குகள் இருக்கிற இந்த இடத்தில் நாம் வாங்கிய வாக்குகள் வெறும் 1,800 தானே? அதை ஏன் என்று கேட்டீர்களா?
.jpg)
மூத்த மந்திரி ஜெயகுமாரே இப்படி 'வேலையில் சுணக்கம்' காட்டியதைப் பார்த்த மற்ற பொறுப்பாளர்கள், முதல்நாளே அவரவர் ஊர்களுக்குக் கிளம்பிப் போய் விட்டது உங்களுக்குத் தெரியுமா?
அம்மா மட்டும் இன்று இருந்திருந்தால், தொகுதியில் வேலை பார்த்த மந்திரிகள், மாவட்டச் செயலாளர்கள் முதற்கொண்டு அனைவரின் பதவியும் பறி போய் இருக்குமே. பொதுத்தேர்தல் முடிவையே அம்மா மன்னிக்க மாட்டார்கள். இடைத்தேர்தல் முடிவை அம்மா அவர்கள் ஏற்பார்களா?
இன்று நம்முடைய அம்மாவை 'ஃபாலோ' செய்து கருணாநிதிக் கட்சியில் அப்படிப்பட்ட முடிவை எடுத்திருக்கிறார்களே?
.jpg)
தொகுதியின் மொத்த நிர்வாகிகளையும் கூண்டோடு நீக்கி உள்ளார்களே. 'அணிகள் இணைந்தாலும் மனங்கள் இணையவில்லை' என்று சகோதரர் மைத்ரேயன் பதிவு போட்ட போது அனைவருமே ஒரே குரலில் மறுத்தீர்களே. உண்மையைச் சொல்லுங்கள், நம் மனங்கள் இணைந்துதான் இருக்கிறதா?

இன்றும் ஓ.பி.எஸ். அணியிலிருந்து வந்தவர்களுக்குக் கட்சியில் எந்த முக்கியப் பொறுப்பும் கொடுக்கப்படாமல் இருக்கிறதே, வடசென்னை மாவட்டம் உள்பட தமிழ்நாடு முழுவதும் அதுதானே உண்மை நிலவரம். இதை காலங்கடந்து போய் இனிமேல்தான் சரி செய்யப் போகிறீர்களா மிஸ்டர் முதல்வர் அவர்களே? கழக இணை ஒருங்கிணைப்பாளர் அவர்களே ?
நம்முடைய இயக்கம் விழுதுகளைத் தாங்கி நிற்கும் பேரியக்கம் என்று என்னைப் போல் பலர் உறுதியாக நம்பிக்கொண்டிருக்கிறோம். வேரிலும், விழுதிலும் கந்தகத்தை ஊற்றிவிட்டு 'கழகமரம்' கண்டிப்பாக நிழல் தரும் என்று சொல்வது போல்தானே இச்சம்பவங்கள் காட்டுகின்றன. எனக்கு திருப்தியைத் தரக் கூடிய அளவில் உங்கள் பதில் இல்லையென்றால் 'தன்னிச்சை' யாக நானே, கட்சியில் சில முடிவுகளை மேற்கொள்ள வேண்டிவரும்..." இவ்வாறு அந்தக் கடிதத்தில் மதுசூதனன் எழுதியிருப்பதாகக் கூறப்படுகிறது.
