madhukudippor sangam nominate in r.k.nagar

ஆர்கே நகர் இடைத்தேர்தல் அடுத்த மாதம் 12ம் தேதி நடைபெறுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதையடுத்து அனைத்து கட்சிகளும், வேட்பாளர்களை அறிவித்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன.

இதில், இதுவரை 13 சுயேட்சைகள், ஆர்கே நகர் தொகுதியில் போட்டியிடுவதாக, வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.

இந்நிலையில், மதுகுடிப்போர் விழிப்புணர்வு சங்கம் சார்பில், இன்று வேட்பாளர் ஆறுமுகம், வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளதாக, அந்த அமைப்பின் மாநில தலைவர் செல்லப்பாண்டியன் தெரிவித்துள்ளார்.

யார் இந்த மதுகுடிப்போர் விழிப்புணர்வு சங்கம்....? ஒரு சிறிய Flash Back...!!!

கடந்த ஜனவரி மாதம் தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தினர். அவர்களுக்கு ஆதரவு தெரிவித்த வணிகர் சங்கத்தினர், வெளிநாட்டு குளிர்பானத்தை விற்பனை செய்வதில்லை என உறுதியளித்தனர். இதற்கு, பொதுமக்களிடம் வரவேற்பு கிடைத்தது.

ஆனால், தமிழ்நாடு மது குடிப்போர் விழிப்புணர்வு சங்கம் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. மேலும், வெளிநாட்டு குளிர்பானமான கோக், பெப்சி விற்பனையை ஜூன் வரை வணிகர்கள் நிறுத்தக் கூடாது என அவர்கள் கோரிக்கை வைத்தனர்.

இதுகுறித்து தமிழ்நாடு மது குடிப்போர் விழிப்புணர்வு சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வணிகர்கள் அறிவித்துள்ள கோக், பெப்சி விற்பனை நிறுத்தம் செய்தி தங்களுக்கு அதிர்ச்சியாக உள்ளது.

டாஸ்மாக் மதுபானகளில் நாங்கள் கோக், பெப்சியை கலந்து குடிப்பதால் மன நிறைவு ஏற்படுகிறது. ஆனால் திடீரென கோக், பெப்சியை நிறுத்துவதால் எங்களுக்கு மன நிலை பாதிக்கப்படும் என குறிப்பிட்டு இருந்தனர்.

மேலும், மது குடித்தாலும் மானத்தோடு வாழ, டவுசர் மாடல் ஜட்டிகளையே அணிய வேண்டும் என குடிமகன்களுக்கு கோரிக்கை வைத்தபடி போஸ்டர்களையும் ஒட்டினர்.

அரவக்குறிச்சி, தஞ்சை, திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகளில் கடந்த நவம்பர் மாதம் இடை தேர்தல் நடந்தது.

அதில் தஞ்சாவூர் தொகுதியில் போட்டியிட்ட ஆறுமுகம், ஏற்கனவே அடித்த சரக்கு பாட்டிகள், வாட்டர் பாக்கெட்டுகள் ஆகியவற்றை கடையில் போட்டு, அதில் கிடைத்த பணத்தை தேர்தலுக்காக டெபாசிட் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.