Madhavan who gave a thithi to jayalalitha
மறைந்த ஜெயலலிதாவுக்கு அவரின் அண்ணன் மகள் ஜெ.தீபாவின் கணவர் மாதவன் இன்று திதி கொடுத்தார்.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உடல் நலக் குறைவு காரணமாக கடந்த வருடம் டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி உயிரிழந்தார். அவரின் நினைவு நாள் நேற்று தமிழகம் முழுவதும் அனுசரிக்கப்பட்டது.
சென்னை, அண்ணா சாலையில் உள்ள அண்ணா சிலையில் இருந்து, மெரினாவில் உள்ள ஜெயலலிதா சமாதிக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் என பல்லாயிரக்கணக்கானோர் அமைதி பேரணி நடத்தினர்.
ஜெயலலிதா சமாதிக்கு சென்ற முதலமைச்சர் உள்ளிட்டவர்கள் அஞ்சலி செலுத்தினர். இதேபோல், தினகரன் தரப்பினர், அண்ணா சாலையில் உள்ள அண்ணா சிலையில் இருந்து அமைதி பேரணி நடத்தி, ஜெயலலிதா சமாதிக்கு சென்று அஞ்சலி செலுத்தினர். நேற்று ஜெயலலிதாவின் முதலாமாண்டு நினைவு நாளை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் ஜெயலலிதாவின் உருவப்படம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்த நிலையில், ஜெயலலிதாவின் அண்ணன் மகளான ஜெ.தீபாவின் கணவர் மாதவன், ஜெயலலிதாவுக்கு திதி கொடுத்தார். ஜெயலலிதா சமாதியின் பின்புறம் உள்ள இடத்தில் மாதவன், ஜெயலலிதாவுக்கு திதி கொடுத்தார்.

இன்று காலை, ஜெயலலிதா சமாதிக்கு பின்புறம் மாதவன் மற்றும் புரோகிதர்கள் சென்றனர். அங்கு ஜெயலலிதாவின் உருவப்படம் வைத்து, புரோகிதர்கள் மந்திரங்கள் ஓத தீபாவின் கணவர் மாதவன் திதி கொடுத்தார். ஜெயலலிதாவின் மூன்று தலைமுறையினரின் பெயரைச் சொல்லி மாதவன் திதி கொடுத்தார்.
ஜெயலலிதா எப்போது உயிரிழந்தார் என்பது தனக்கு தெரியாது என்றும் ஜெ. அடக்கம் செய்யப்பட்ட தினம் அன்று, தான் திதி கொடுப்பதாகவும் மாதவன் கூறினார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு மாதவன், செய்தியாளர்களிடம் பேசும்போது, ஜெயலலிதா எனது மனைவிக்கு அத்தை என்றால் எனக்கு தாய்தான் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
